ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - சந்தர்ப்பத்தை சாதகமாக்கும் தமிழ் அரசியல் வாதிகளும், இந்துத்துவ தமிழ் ஊடகங்களும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2019

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - சந்தர்ப்பத்தை சாதகமாக்கும் தமிழ் அரசியல் வாதிகளும், இந்துத்துவ தமிழ் ஊடகங்களும்

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறன்று ஶ்ரீலங்காவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இலங்கையின் மீதும் முஸ்லிம்களின் மீதும் எல்லோரது கவனத்தையும் இழுத்துள்ளது.

எங்கு பார்த்தாலும் பயமும், துவேசமும் கலந்த பார்வைகளும் செயற்பாடுகளும், பத்து நாட்கள் கடந்து விட்டன ஆனாலும் இன்றும் இயல்பு நிலை தோன்றவில்லை.

இஸ்லாமிய அடிப்படை வாதம் இதற்கு காரணம் என்று இஸ்லாமியர்கள் சிலரும் கூறுவது கவலைக்குரியது, தாங்கள் இதற்கு சம்பந்தமில்லை என்று தங்களை காப்பாற்றுவதற்காக சில முஸ்லிம்களும், தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை முஸ்லிம்களது இரு கண்களும் போனால் போதும் என்ற ரீதியில் இந்துத்துவ தமிழ் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் மற்றும் தங்கள் விருப்பு வெறுப்புக்கேற்ப இதனை பயன்படுத்த முயலும் பேரின சமூகமும் இவ்விடயத்தில் வாயென்ன சொன்னாலும் முழு முஸ்லிம்களையும் குற்றஞ்சாட்டவே முயல்கின்றனர்.

இஸ்லாமிய அடிப்படை என்பது ஈமான், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்டவர்கள் அல்குர்ஆனின் வழியிலும், அல்லாஹ்வின் தூதர் காட்டித் தந்த வழியிலுமே எல்லா விடயங்களிலும் நடப்பார்கள்.

எனவே இஸ்லாமிய அடிப்படையை ஏற்றுக் கொண்டவன் LTTE பயங்கரவாதிகளைப்போல,

1. தற்கொலை செய்ய மாட்டான்.
2.மதஸ்தலங்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுபவர்களை தாக்க மாட்டான்.
3.யுத்தத்தில் கூட குழந்தைகளை கொல்ல மாட்டான்.

இவ்வாறு பல விடயங்கள் இருக்கின்றன. எனவே ஈஸ்டர் தின தாக்குதலை நடாத்தியவர்கள் இஸ்லாமியர்களே அல்ல, இஸ்லாமிய பெயர்களை கொண்ட ISIS பயங்கரவாதிகள்.

அமெரிக்கா எந்த நாட்டுக்குள் ஊடுருவ நினைக்கிறதோ அங்கெல்லாம் ISIS தாக்குதல்தான் முதலில் நடக்கும், அதனை ஒழிக்கப் போகிறோம் என்ற பெயரில்தான் அங்கு நுழைவார்கள், இங்கு ஏற்பாடான சர்வதேச சதிவலைப் பின்னலால்தான் தாக்குதல் நடக்கப்போகிறது என RAW அறிவித்ததும் அத்தகவல் சரியாகப் பங்கிடப்படாததுமாகும்.

ஆனால் தற்போது ஜனாதிபதி பாதுகாப்பு உயர்மட்டங்களில் செய்துள்ள மாற்றங்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஏற்படுத்தியுள்ள பாதுகாப்பு ஆலோசனைக்குழு என்பன ISIS க்கும் அதன் தலைவராக செயற்படும் இஸ்லாத்திற்கெதிரான யூதரான அபூபக்ர் அல் பக்தாதி என்பவருக்கு கொடுத்த அதிர்ச்சியே ஐந்து வருடங்களுக்குப் பின் காணொளியில் அவர் தோன்றி விளக்கம் கொடுக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.

அதுமாத்திரமல்ல இலங்கைப் புலளாய்வுப் பிரிவினருக்கு உதவ எள அழையாமலேயே இங்கு வந்திருக்கும் அமெரிக்காவின் FBI இனர், இலங்கை இராணுவத்தின் புலனாய்வு விசேட பிரிவான K-9 இன் “Frank” என்ற மோப்ப நாயின் திறமையை பார்த்தே அதிர்ச்சியடைந்துள்ளனர் அமெரிக்க அதிகாரிகளுக்கு அதனைப் பழக்கிய இலங்கை இராணுவத்தினரின் திறமை புரியாமலா இருக்கும், இதைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் “எந்த பிரச்சினையையும் தீர்க்கும் பலமும் திறமையும் எமது படையினரிடம் உண்டு, வெளிநாட்டு உதவி தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.

இவையெல்லாம் இவ்வாறிருக்க, கடந்த பாராளுமன்ற அமர்வு, சில ஊடக மாநாடுகள், பேட்டிகள், சில இலத்திரனியல் ஊடக செய்திகள் போன்றவற்றில் நடந்த சில விடயங்களை எனது பார்வையில் தருகின்றேன்.

அ) கடந்த 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட விவாத்த்தின்போது பலர் நாட்டுப்பற்றோடு பேசிய போதிலும் குறிப்பிட்ட சிலர் முஸ்லிம் சமூகத்திற்கும் குறிப்பாக சில முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கெதிரான கருத்துக்களையும் தெரிவித்ததை காணக் கூடியதாக இருந்தது. 

அதிலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழமைபோல கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிரான கருத்துக்களை நடந்த ஈஸ்டர் தின தாக்குதலோடு சம்பந்தப்படுத்தி தெரிவித்தது அவர்களது சந்தர்ப்பவாத அரசியலாகவே தெரிந்தது.

இங்கு கவலைப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அமைச்சர் றிஷாட் அவர்கள் தனக்கெதிரான குற்றச் சாட்டுக்களை மறுக்கும் வேலையை செய்ய வேண்டி இருந்ததே தவிர இஸ்லாமிய பண்புகள், யார் இந்த ISIS , முஸ்விம்களின் நாட்டுப்பற்று, எல்லா இஸ்லாமிய இயக்கங்களையும் குற்றஞ் சாட்டுவது தவறு போன்ற தேவையான கருத்துக்களை அங்கு தெளிவாகச் சொல்ல அங்கு யாரும் இருக்கவில்லை.

இதற்கு காரணமாக நேர ஒதுக்கீடு கூறப்பட்டாலும் இங்கு முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளே அதிகம் விவாதிக்கப்படும் என தெரிந்ததால் ஐ.தே.கட்சியிடம் அதிக நேரத்தை கேட்டுப் பெற்று இருக்க வேண்டும். 

அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் சபையில் இல்லாத நேரத்தில் அவர் தொடர்பான குற்றச்சாட்டுக்கு இறுதி செக்கனில் எழுந்து விளக்கம் கொடுத்தாலும் சபாநாயகர் சபையை adjourn பண்ணும் நோக்கத்திலேயே காணப்பட்டார்.

அதைவிட ஹிஸ்புல்லா அவர்களுக்கெதிரான கருத்துக்களை மட்டு மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்ல வடக்கின் ஒரு சிலரும் தெரிவித்ததானது இவரை கிழக்கின் ஆளுநர் பதவியிலிருந்து ஓரங்கட்ட வேண்டுமென்ற நோக்கைக் கொண்டதாகவே இருந்தது.

அவர்கள் கூறுவது போல கிழக்கின் ஆளுநராக ஹிஸ்புல்லா அவர்களை நியமித்தது பிழை என்பதை விட அவர் அதனை ஏற்றுக் கொண்டதே பிழை, அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யப் போகும் வேளையில், இக்கால கட்டத்தில் புதிய அரசியலமைப்பு உட்பட பல சட்ட மூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன.

தலைவர்கள் எல்லோரும் ஆளுங்கட்சியில் இருப்பதால் மௌனங்காக்க வேண்டியிருக்கும் எனவே ஹிஸ்புல்லா அவர்களால் சமூகத்திற்காக போராட முடியும் என்று நாங்கள் சொன்னதை படித்தவர்களே ஏற்றுக் கொள்ளவில்லை, மற்றவர்கள் நிலை! இப்போது ஹிஸ்புல்லாவுக்காக யாரும் (அவர் சார்ந்த கட்சியினர் கூட) வாய் திறக்க வில்லை, அவர் அங்கிருந்திருந்தால் அவருக்காக மட்டுமல்ல சமூகத்திற்காகவும் பேசியிருப்பார்.

அந்த ஆற்றல் அவரிடமிருந்தும் பயன்படுத்த முடியாத நிலை, பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் அவர்கள் எழுதி வந்ததை வாசிக்காமல் நிலைமைக்கேற்ப தனது சக்திக்கேற்ப பேசியதை பாராட்டத்தான் வேண்டும்.

ஆ) எனதூர் TNA பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களின் அன்றைய உரையில் “இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கிறிஸ்தவ தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்றும், விடுதலைப் புலிகள் அரச பாதுகாப்பு படைகளுக்கும், பொலிசாருக்கும் எதிராகவே தாக்குதல் நடாத்தினரே தவிர பொதுமக்களை கொல்லவே இல்லை எனத் தெரிவித்தார்.

இதற்கு நாங்கள் மௌனமாக இருந்தால் வரலாறு தெரியாத சிங்களவர் மாத்திரமல்ல முஸ்லிம், தமிழ் இளைஞர்களும் நம்பி விடுவர்.

கௌரவ யோகேஸ்வரன் அவர்களே, இஸ்லாத்தில் பயங்கரவாதமே இல்லை, நடந்தது ISIS பயங்கரவாத தாக்குதல் என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் 1000 வருட பழமையான வரலாறு போல புலிகள் இயக்கத்தை பற்றி சொல்லியிருக்கிறீர்களே, நீங்கள் உங்கள் வீட்டில் மாத்திரம் வசித்தவர், நானோ எனது வீட்டில் மாத்திரமல்ல தமிழர் வீடுகளிலும், தமிழர் விடுதிகளிலும் தமிழ் இயக்கங்கள் எங்களைப் பிரிக்கும் வரை ஒன்றாக வாழ்ந்தவன், உங்களுக்கு வரலாறு சொல்வதில் மகிழ்கின்றேன்.

27.07.1975 இல் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவை கொன்றது தொடக்கம் அதே யாழ் மேயர் சரோஜினி யோகேஸ்வரன் அவர்களை 17.05.1998 இல் கொலை செய்யும் வரை விடுதலைப் புலிகள் நீங்கள் கூறிய பாதுகாப்பு தரப்பினர் தவிர ராஜீவ் காந்தி, பிரேமதாச, அமிர்தலிங்கம் போன்ற எத்தனையோ அரசியல் தலைவர்கள், பத்மநாபா, இரா.சபாரத்தினம், மாத்தயா என்றழைக்கப்பட்ட மஹேந்திர்ராஜா போன்ற எத்தனை விடுதலைப் போராளிகள் மற்றும் சிவசிதம்பரம், வை.அஹமட், போன்ற எத்தனையோ கற்றவர்களெல்லாம் கொலை செய்யப்பட்டார்கள்.

இவற்றையெல்லாம் விட அப்பாவி மக்களை நோக்காக கொண்டு செய்யப்பட்ட முக்கிய தாக்குதல்கள்.

01) 03.08.84 - சென்னை மீனம்பாக்க விமான நிலைய தாக்குதல் (33 பலி. 27 காயம்)

02) 30.11.84 - Kent Farm தாக்குதல் (29 பலி)

03) 03.12.84 - கொக்கிளாய் (11 பேர் பலி)

04) 14.05.85 - அநுராதபுரம் ஜயஶ்ரீ மஹபோதி (146 பலி, 85 காயம்)

05) 09.02.86 - சேருநுவர அகதிகள் கந்தளாய் செல்லும் ஙழியில் (35 பலி)

06) 03.05.86 - கட்டுநாயக விமான நிலையம் (13 வெளி நாட்டவர் உட்பட 21 பேர் பலி, 41 பேர் காயம்)

07) 17.04.87 - ஹபரண - திருகோணமலை வீதியால் 03 பஸ், 02 ட்ரக் வாகனங்களில் சென்ற சிங்களவர்களை Army உடை தரித்து நிறுத்தி தாக்கியதில் (பலி -127, காயம்- 64)

08. 21.04.87 - கொழும்பு பஸ் நிலைய கார்க் குண்டு வெடிப்பு (113 பேர் பலி)

09) 03.08.90 - காத்தான்குடி பள்ளிவாயலில் இரவுத் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது 30 பேர் கொண்ட குழு தாக்குதல் (147 பேர் பலி) 

10. 15.10.91 - பொலநறுவ, அழிஞ்சிபொதான தாக்குதல் (171 முஸ்லிம்கள் உட்பட 182 பொதுமக்கள் பலி)

11. 25.05.95 - கல்லறவ மீன் பிடிக் கிராமம் (42 பேர் பலி)

12. 04.10.95 - ஏறாவூர் (129 பேர் பலி)

13. 24.07.96 - கொழும்பு - அழுத்கம புகையிரத குண்டு வெடிப்பு ( பலி - 64, காயம் - 400)

14. 15.10.97 - Colombo World Trade Centre குண்டு வெடிப்பு (15 பேர் பலி, 105 பேர் காயம்)

15. 25.01.98 - கண்டி தலதா மாளிகை தாக்குதல் (17 பேர் பலி , 25 பேர் காயம்)

எல்லா தாக்குதல்களையும் இங்கு காட்டவில்லை, வெளிநாட்டவர் மீது, மதஸ்தலங்கள் மீது, அகதிகள் மீது, குழந்தைகள் மீது, வாகளங்கள் மீது, சுற்றுலா தலங்களில் என பொதுமக்களை விடுதலைப் புலிகள் கொலை செய்த சம்பவங்களுக்கு சில உதாரணங்களே இவை.

இ) அண்மையில் கனடா CMR வானொலியில் அறிவிப்பாளர் பாலா ரட்ணம் அவர்கள் அமைச்சர் அமீரலி அவர்களுடன் நேயர் கேள்விகளுடன் கூடிய நேர்காணல் செய்தார்.

அறிவிப்பாளர் உட்பட அனைத்து நேயர்களும் துவேசப் பார்வையோடு தாக்குதலை திட்டமிட்டவரிடம் புலனாய்வாளர்கள் விசாரிப்பது போல அமீரலி அவர்களிடம் இத்தாக்குதலை ஏன் அங்கு செய்தீர்கள் ? அப்படிச் செய்தீர்கள் எனக் கேள்விகளைத் தொடுத்தது ஊடக தர்மத்திற்கு பிழையாக இருந்த போதும் அமீரலி அவர்களின் நியாயமான பதில்கள் அவர்களது நோக்கத்திற்கு இடங் கொடுக்கவில்லை.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சர்மா அவர்கள் நியாயத்தை பேசியது ஆறுதலாக இருந்தது. இதில் அநேக நேயர்கள் குறையாக கருதும் ஒரு விடயத்தை அவுஸ்திரேலியாவில் இருந்து ஒரு பெண், தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம்கள் தமிழர்களாக இருக்கிறார்கள், கேரளாவில் வசிக்கும் முஸ்லிம்கள் மலையாளிகளாக இருக்கிறார்கள் ஆனால் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் ஏன் தமிழர்களாக இல்லாமல் இனத்தைத்தான் கூறுகிறீர்கள் எனக் கேட்டார். 

அம்மணி, 80 களுக்கு முன்பு அப்படித்தான் வாழ்ந்தோம், உங்களது அரசியல்வாதிகளும் விடுதலைப் போராளிகளும்தானே இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள்! நாங்கள்தான் தமிழர்கள் என்று நினைக்காமல் விட்டு விட்டோம், நீங்கள் ஏன் இந்துத் தமிழர்களையும், கிறிஸ்தவ தமிழர்களையும் வடக்கில் வைத்துக் கொண்டு இஸ்லாமியத் தமிழர்களை மாத்திரம் வெளியேற்றினீர்கள்?

ஈ) JVP News என்ற பெயரில் இயங்கும் தமிழ் ஊடகமொன்று காத்தான்குடி படு கொலைகளை செய்தது புலிகளல்ல அது கருணா அம்மானின் வேலை என்றும் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது புலிகளல்ல அதுவும் கருணாதான் என்று கூறுகிறது. அப்படியென்றால் அங்கும் இரு தலைவர்களைக் கொண்ட நல்லாட்சி நடந்ததோ! 

இது இப்படி இருக்க கௌரவ யோகேஸ்வரன் அவர்கள் முஸ்லிம்களின் பாதுகாப்பு கருதியே பிரபாகரன் அவர்களை வடக்கிலிருந்து வெளியேற்றினார் என்று கூறுகிறார், பிழையை செய்யும் போதும் அதை சரியாக செய்யப் பழகிக் கொள்ளுங்கள், இப்படியாக தமிழ் ஊடகங்கள் முஸ்லிம்கள் மீது பழி தீர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபட முஸ்லிம்களின் ஊடகங்கள் உண்மை, பொய், யதார்த்தம் விளங்காமல் கட்சி அரசியலுக்காகவே எழுதுவதுதான் வேதனையாக உள்ளது.

எஸ். ஜவாஹிர் சாலி (SLEAS)
முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர், 
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.

No comments:

Post a Comment