பொன்னாடை போர்த்துவதற்காக செலவு செய்யப்படும் பணத்தை கல்விக்காக பயன்படுத்துங்கள் - றிஷாத் பதியுதீன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 2, 2019

பொன்னாடை போர்த்துவதற்காக செலவு செய்யப்படும் பணத்தை கல்விக்காக பயன்படுத்துங்கள் - றிஷாத் பதியுதீன்

எச்.எம்.எம்.பர்ஸான்
பொன்னாடை போர்த்துகின்ற விடயம் இஸ்லாமிய மார்க்கத்தில் கூடுமா இல்லையா என்பது பற்றி மார்க்க அறிஞர்களிடத்தில் கேட்டறிந்து கொள்ள வேண்டும் என்று கைத்தொழில், வர்த்தகம் மற்றும் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விக்குட்பட்ட மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தில் இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு அதிபர் எம்.ஏ.சீ.ஜிப்ரி கரீம் அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை 29ம் திகதி நடைபெற்றது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில், இந்த மாஞ்சோலை கிராமத்தில் இருக்கின்ற சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைந்துதான் நல்லபல காரியங்களை செய்கின்றனர் என்று நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். 

இங்கு ஏராளமான பொன்னாடைகள் போடப்பட்டுள்ளது. எனவே பொன்னாடைகளுக்கு பணங்களை எதிர்காலத்தில் அதிகம் செலவு செய்யாமல் அதை நாங்கள் பாடசாலைகளுக்காக, கல்விக்காக அல்லது நல்லதொரு விடயங்களுக்காக செலவு செய்கின்ற நல்ல பக்குவம் கொண்டவர்களாக நாம் வரவேண்டும் என்று தெரிவித்தார்.

நமது மார்க்கம் அழகான மார்க்கம் இது எல்லோருக்கும் உரிய மார்க்கம் ஆனால் இந்த மார்க்கத்தில் எங்களுடைய செயற்பாடுகள் தவறாக இருப்பதினால் இன்று இந்த நாட்டிலே அச்சத்தோடு நமது முஸ்லிம் சமுதாயம் வாழுகின்ற நிலமை ஏற்பட்டிருக்கிறது.

மாற்று மத சகோதரர்கள் மத்தியில் இஸ்லாமியனுடைய பண்பைப் பற்றி நாங்கள் சரியான முறையில் சொல்லியிருக்கின்றோமா என்று பார்க்கின்ற போது அந்த இடத்திடல் நாங்கள் தவறு இழைத்திருக்கின்றோம். 

எனவே இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் தவறாகப் பார்க்கின்றவொரு துர்ப்பாக்கிய நிலை நமது நாட்டிலும் வந்திருக்கிறது.

உலகளாவிய ரீதியில் பல சவால்கள் இஸ்லாத்திற்கு வந்திருக்கின்ற போதும் நமது நாட்டிலே இஸ்லாமியர்களுடைய வரலாறு மிகவும் தெளிவானதாக இருந்திருக்கின்றது, ஜனநாயகத்தோடு ஒத்ததாக இருந்திருக்கிறது இந்த நாட்டின் பற்றுள்ள சமூகமாக, சமூகத் தலைவர்களாக வாழ்ந்து காட்டியிருக்கிறது. ஆனால் இன்று யுத்தத்திற்குப் பிறகு வந்திருக்கின்ற சவால்கள் மிகவும் ஆபத்தான சவால்களாக எங்களுக்கு முன்னால் இருக்கின்றது.

நாங்கள் எங்களுடைய பிள்ளைகளை நல்ல கல்வியோடு நல்ல ஒழுக்கத்தோடு வளர்க்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது இன்று நமக்கு முன்னால் இருக்கின்ற இவ்வாறான சவால்கள், நாங்கள் செய்யாத தவறுகளை செய்ததாக எங்கள் மீது திணிக்கின்றார்கள் எங்களை அநியாயமாக வம்புக்கு இழுக்கின்றார்கள் எங்களுடைய மார்க்கத்தின் மீதும் எங்களுடைய சொத்துக்கள் மீதும் எங்களுடைய எதிர்காலத்தின் மீதும் சீண்டுகின்ற செயல் திட்டமிட்டு நடந்து கொண்டிருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment