மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் மற்றும் ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக கழிவு நீர் அகற்றும் பாரிய திட்டமொன்றினை முன்னெடுப்பது தொடர்பாக கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் ZA.நஸீர் அஹமட் பல முயற்சிகளோடு முன்னெடுத்த இத்திட்டத்தின் ஆரம்ப உயர்மட்ட மாநாடு இன்று ஏறாவூர் நகரசபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
சுமார் 1300 கோடி ரூபா வெளிநாட்டு நிதியுதவியுடன் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சினால் இத்திட்டம் அமுல் செய்யப்படவுள்ளது.
எமது பிரதேசம் இயற்கை அனர்த்தங்களினால் முறையான கழிவகற்றலும் வடிகான் திட்டமும் இல்லாது மக்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதை அறிந்தே அன்றைய கிழக்கின் முதலமைச்சர் இதற்கான நிறந்தர தீர்வை முன்வைத்தார்.
குடியிருப்பு தொடக்கம் வந்தார்மூலை வரை கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை உள்ளடக்கிய திட்டத்தை மாகாண சபையில் முன்வைத்து அதற்கான காய்நகர்த்தலை ஆரம்பித்தார்.
அதன் தொடராக இன்று குறித்த மாநாடு பல உயர் அதிகாரிகளோடு ஏறாவூர் நகர சபையில் சபையின் கௌரவ உறுப்பினர்கள் உட்பட உள்தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பிரதான பொறியிலாளர் எஸ். சுதர்சன், பிராந்திய முகாமையாளர் பொறியிலாளர் டிஏ. பிரகாஸ், மாவட்ட பொறியிலாளர் ஏ.எல்.எம். பிர்தௌஸ் மற்றும் பிரதேச செயலாளர் வீ. யூசுப் பொலிஸ் உயர் அதிகாரிகள், சுகாதார பரிசோதகர், உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலர் இம்மாநாட்டில் பிரசன்னமாயிருந்தனர்.
இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையடுத்து இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் கழிவு நீரை சேகரித்து, பராமரிப்பதற்கு சுமார் இருபது ஏக்கர் நிலத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக இம்மாநாட்டில் ஆராயப்பட்டது.
சேகரிக்கப்படும் கழிவு நீர் புன்னக்குடா மற்றும் சவுக்கடி கடலின் ஆழமான பகுதியில் விடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஆறுமுகத்தான்குடியிருப்பு தொடக்கம் செங்கலடி வரையிலான தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் சனநெரிசல் காணப்படுவதனால் நிலத்தடி நீர் அழுக்கடைந்து குடிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட்தையடுத்து கழிவு நீர் அகற்றும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரியொருவர் கருத்துத் தெரிவித்தார்.
இத்திட்டம் நிறைவேற்றப்படும்போது. எதிர்காலத்தில் மக்களின் பல தேவைப்பாடுகள் பூர்த்தியாக்கப்பட்டு காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களில் இருந்து சில பாதிப்புக்களை தடுத்து சுகாதாரமான வாழ்க்கையை எமது பிரதேச மக்கள் வாழ முடியும்.
No comments:
Post a Comment