உக்ரைன் ஜனாதிபதித் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 31, 2019

உக்ரைன் ஜனாதிபதித் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

உக்ரைன் ஜனாதிபதித் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் நகைச்சுவை நடிகர் வோலோடிமிர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று, உக்ரைன். அதன் ஜனாதிபதியாக 2014ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 7ஆம் திகதி முதல் பதவியில் இருப்பவர், பெட்ரோ போரோஷெங்கோ.

இந்த நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், மார்ச் 31ஆம் திகதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் மொத்தம் 39 பேர் வேட்பாளர்களாக களத்தில் குதித்தனர்.

ஜனாதிபதி பெட்ரோ போரோஷெங்கோ, மீண்டும் ஜனாதிபதி ஆவதற்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து 38 பேர் போட்டியிட்டாலும் உண்மையான போட்டி அவருக்கும், அந்த நாட்டின் நகைச்சுவை நடிகர் வோலோடிமிருக்கும், முன்னாள் பிரதமர் யூலியா டிமோஷெங்கோவுக்கும் இடையேதான் நிலவுகிறது.

மொத்தம், 3 கோடியே 45 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகை 4 கோடியே 40 லட்சம் பேரில் 12 சதவீதம் பேர் ரஷியா, கிரிமியாவில் வசிப்பதால் வாக்குரிமையை இழந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்கு போட்டு தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

இந்த தேர்தல் கருத்துக்கணிப்புகள் நகைச்சுவை நடிகர் வோலோடிமிருக்கு சாதகமாக அமைந்துள்ளன. எனவே அவர் வெற்றி பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவர் நகைச்சுவை டி.வி. ஷோ ஒன்றின் மூலம் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றார்.

அந்த டி.வி. ஷோவில் அவர் சாதாரண குடிமகன் ஒருவர், ஊழலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, கடைசியில் நாட்டின் ஜனாதிபதியாக உயர்வது போல காட்சி அமைத்திருந்தார். அது இப்போது நிஜமாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அவர் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார். அவரது பதிவுகள் இளையதலைமுறை வாக்காளர்களின் கவனத்தைக் கவர்வதாக அமைந்துள்ளன.

அதே நேரத்தில் தற்போதைய ஜனாதிபதி பெட்ரோ போரோஷெங்கோ, ராணுவம், மொழி, விசுவாசம் என்ற கோஷத்தை முன்வைத்து பிரசாரம் செய்தார்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறவர்தான் வெற்றி பெற முடியும். ஒருவேளை அப்படி யாரும் பெறாவிட்டால் இரண்டாவது சுற்று தேர்தல் வரும் 21ஆம் திகதி நடைபெறும். அப்போது நேற்றைய தேர்தலில் முதல் 2 இடங்களைப் பெற்றவர்கள் மட்டுமே களத்தில் நிற்பார்கள்.

No comments:

Post a Comment