சிங்கள, முஸ்லிம் கலவரத்தை தூண்டுவதற்கான சதியை சிலர் திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறார்கள் - அமைச்சர் றிஷாத் பதியுதீன் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 31, 2019

சிங்கள, முஸ்லிம் கலவரத்தை தூண்டுவதற்கான சதியை சிலர் திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறார்கள் - அமைச்சர் றிஷாத் பதியுதீன்



எச்.எம்.எம்.பர்ஸான்
இன்று இந்த நாட்டிலே யுத்தத்திக்குப் பிறகு ஒரு புது வடிவமான பிரச்சினைகள் தோன்றி இருக்கிறது இந்தப் பிரச்சினைகள் எல்லாம் திட்டமிடப்பட்டு முஸ்லிம் சமுதாயத்தை துன்பத்திலும்,துயரத்திலும் ஆக்குவதக்கு திட்டமிடப்படுகின்றது என்று கைத்தொழில், வர்த்தகம் மற்றும் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஓட்டமாவடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மணிக்கூட்டுக் கோபுரம் வெள்ளிக்கிழமை (29) ம் திகது பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், இன்னுமொரு மூன்று நான்கு தசாப்தங்களுக்கு இந்த நாட்டிலே ஒரு அழிவை ஏற்படுத்தி அந்த அழிவில் ஒரு பெரிய பங்கை பெருகின்ற ஒரு சமுதாயமாக முஸ்லிம் சமூகத்தை கொண்டு போய்த் தள்ள வேண்டும் என்பதிலே பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் இருக்கின்ற ஒருசில வர்த்தக சமூகம், அரசியல் பிரமுகர்கள், மதகுருமார்கள், ஒருசில இனவாதிகள் என்று திட்டமிட்டு நிறைய பணத்தையும் செலவு செய்து கொண்டிருக்கின்றது.

இந்த நாட்டிலே வாழுகின்ற பௌத்த மக்களிலே பெரும்பான்மையினர் நல்லவர்கள் ஆனால் அந்த நல்லவர்களுக்கு விசத்தை, நஞ்சை விதைத்துக் கொண்டு பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகம், வியாபாரத் தளங்களில் இருந்து எல்லாத் திசைகளிலும் நகரம் நகரமாகச் சென்று மேடை போட்டு இந்த இஸ்லாத்தையும் இஸ்லாமிய அரசியல் வாதிகளையும் விமர்சித்து சிங்கள முஸ்லிம் கலவரத்தை தூண்டுவதற்கான சதியை திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறார்கள். 

வியாபாரிகள் இதன் பின்னால் இருக்கிறார்கள் என்று சொன்னேன் ஏனென்றால் சில வியாபாரத் தளங்கள் திட்டமிட்டு தாக்கப்பட்ட வரலாறு இருக்கின்றது பெரிய வியாபாரத் தளங்களாக இருக்கின்ற பல இவ்வாறு சூறையாடப்பட்ட வரலாறு இருக்கின்றது.
கடந்த ஒரு மாதமாக மிக மோசமாக விமர்சிக்கப்படுகின்ற ஒருவனாக நான் உள்ளேன் என்னைக் காட்டி என்னுடைய சொந்த மக்கள் வாழுகின்ற, சொந்த பூமியிலே மீள் குடியேறிய விடயத்தை விசாலமான பிரச்சினையாக, ஒரு பெரிய அநியாயமாக காட்டுகின்றார்கள். 

இந்த நாட்டில் மழை வரவில்லையா அதற்கும் நாங்கள்தான் காரணம், இந்த நாட்டிலே காலநிலை மாற்றமா அதற்கு மன்னாரிலே குடியேறிய மக்கள்தான் காரணம் அல்லது அந்த குடியேறிய மக்களை பொறுப்பெடுத்துச் செய்த நமது கட்சியும், நாங்களும்தான் காரணம் என்று விசமப் பிரச்சாரத்தை இன்று முன்னெடுத்து வருகின்ற ஒரு காலமாக இது இருக்கின்றது.

வியாபாரிகள் தங்களுடைய வியாபாரத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இவ்வாறான மோசமான அர்த்தத்தை தெரிவித்து சில வியாபாரத் தளங்களுடைய பெயர்களைச் சொல்லி அங்கு பகிரங்கமாச் செல்லாதீர்கள் அங்கே பொருட்களை வாங்காதீர்கள் என்று சமூக வலைத்தளங்களில் மிக மோசமாகப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான சதிகாரர்கள்தான் இன்று இவ்வாறான பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

மூன்று தசாப்தம் யுத்தம் நடந்தது அந்த யுத்தத்தின் வடுவிலிருந்து, துன்பத்திலிருந்து, துயரத்திலிருந்து இன்னும் நாங்கள் விடுபடவில்லை அதில் இன்னுமொரு துன்பத்தை துயரத்தை நம்மீது திணிப்பதற்கு இவ்வாறான சதிகாரக் கூட்டங்கள் திட்டமிட்டுச் செய்கிறார்கள்.

இன்று பல்கலைகழகங்கள் எல்லாம் இந்த விசம் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது இன்று எமக்கு முன்னால் இருக்கின்ற சவால்கள் மிகவும் ஆபத்தானதாக இருக்கின்றது எங்களிடமுள்ள அரசியல் அதிகாரத்தினூடாக, இறைவன் எங்களுக்குத் தந்திருக்கின்ற இந்த வாக்குரிமையூடாக, இறைவன் எங்களை ஒற்றுமைப் படுத்தியதினூடாக நாங்கள் இன்று அரசியல் பலத்தில் இருக்கின்றோம் அதனால்தான் நாங்கள் இன்று தைரியமாக பேசிக் கொண்டிருக்கின்றோம். 
அதுமட்டுமல்ல எல்லா விசயங்களையும் நாங்கள் எங்களுக்கு முன்னால் இருக்கின்ற சவால்களை எதிர்த்து எவ்வாறு நாங்கள் பயணிக்க வேண்டும் என்பதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கின்றோம். 

இது ஒரு தனிநபரால், ஒரு அமைச்சரால், ஒரு தலைவரால் அல்லது ஒரு கட்சியில் இருக்கின்ற உயர்பீட உறுப்பினர்களால் செய்துவிட முடியாது ஒவ்வொரு குடும்பஸ்தனும், ஒவ்வொரு பிரஜையும், ஒவ்வொரு உலமாவும், ஒவ்வொரு மனிதனும் இந்த அமானிதத்தை சுமக்க வேண்டிய, இதற்காக சிந்திக்க வேண்டிய, இதற்காக முகம் கொடுக்க வேண்டும் என்பது பற்றி திட்டமிடுகின்றவர்களாக நாங்கள் இருக்க வேண்டும்.

நாங்கள் யாருக்கும் அநீதி இழைக்கின்றவர்களல்ல நாங்கள் எல்லோருக்கும் உதவி செய்கின்றவர்கள் யாருடைய சொத்தையும் அபகரிக்கின்றவர்களல்ல அவ்வாறு அபகரிப்பது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது. மார்க்கம் பார்க்காமல், மதம் பார்க்காமல், இனம், நிறம் பார்க்காமல் உதவி செய்யுங்கள் என்று இஸ்லாம் சொல்லியிருக்கிறது அதேபோன்று மனிதர்களுக்கு உதவி செய்கின்ற போது நன்மையைத் தருவேன் என்று இறைவன் சொல்லியிருக்கின்றான். 

பாதையில் செல்லுகின்ற போது ஒரு முள் கிடந்தால் அதை தூக்கி வீசினால் அதற்கான நன்மையும் இந்த மார்க்கத்தில் இருக்கின்றது எனவே அவ்வாறு எல்லா இனத்தையும், மதத்தையும் எல்லா சமூதாயத்தையும் சேர்த்துக் கொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்கின்ற போது நன்மைகளைத் தருவேன் என்று இறைவன் சொல்லி இருக்கின்றான் என்றார்.

இந்நிகழ்வில் அதிதிகளாக விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, துறைமுக மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப் கட்சியின் பொதுச் செயலாளர் சுபைதீன், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment