உழவு இயந்திரமும் டிப்பர் வாகனமும் மணல் ஏற்றப்பட்ட நிலையில் மடக்கி பிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 9, 2019

உழவு இயந்திரமும் டிப்பர் வாகனமும் மணல் ஏற்றப்பட்ட நிலையில் மடக்கி பிடிப்பு

யாழ். அரியாலை - பூம்புகார் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த உழவு இயந்திரம் மற்றும் டிப்பர் வாகனம் ஆகியவற்றை சிறப்பு குற்றத் தடுப்பு பொலிஸார் மடக்கி பிடித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தப்பி ஓடியுள்ளார். 

யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவால் இந்த மணல் கடத்தல் இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு முறியடிக்கப்பட்டது என்று பொலிஸார் கூறினர். 

´யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரியாலை பூம்புகார் பகுதியில் நள்ளிரவு வேளையில் மணல் கொள்ளை இடம் பெறுவதாகவும் அது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டது. 

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் பூங்புகார் பகுதியில் நேற்று நள்ளிரவு சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். 

இதன்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் இன்று அதிகாலை 2 மணியளவில் மடக்கப்பிடிக்கப்பட்டன. உழவு இயந்திரச் சாரதி தப்பி ஓடிய நிலையில் டிப்பர் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டார். 

உழவு இயந்திரமும் டிப்பர் வாகனமும் மணல் ஏற்றப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment