இனியும் பொறுக்க முடியாது - ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இதயத்திலேயே கை வைக்க முனைந்து விட்டார்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 9, 2019

இனியும் பொறுக்க முடியாது - ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இதயத்திலேயே கை வைக்க முனைந்து விட்டார்கள்

வை எல் எஸ் ஹமீட்
வரலாற்றில் முஸ்லிம்கள் தமது கடந்த கால இழப்புக்கள் அனைத்தையும் அடைந்து கொள்ளக் கூடிய சுயத்தில் பலவீனமான, முஸ்லிம்களின் முட்டினால் பலமடைந்த ஒரு அரசு இம்முறை கிடைத்தது.

சமூகத்திற்கான முஸ்லிம் அரசியலாக இருந்திருந்தால் ஆட்சியின் ஆரம்பத்திலேயே நம்பிரச்சினைகள் பட்டியலிடப்பட்டு தீர்க்கப்பட்டிருக்கும். ஆனால் எதுவும் தீரவில்லை. ஏன் ? ஏன் என்று அவர்களும் கூறவில்லை. சமூகமும் கேட்கவில்லை அது ஏன்?

கடந்த ஒரு வருடத்திற்கு முன் அரசுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தது. அதையாவது சந்தர்ப்பமாக பயன்படுத்தி தீராத பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிரச்சினைகள் வளர்ந்தன. இழப்புகள் தொடர்ந்தன. பிரச்சினைகள் எதுவும் தீரவில்லை. ஏன்? சமூகமும் கேட்கவில்லை, ஏன்?

ஒக்டோபர் 26 அரசு கவிழ்ந்தது. அச்சந்தர்ப்பத்தில் ஆதரவு வழங்குவது தவிர்க்க முடியாதது காரணம் அரசியலமைப்பு அத்துமீறலை அனுமதிக்க முடியாது. ஆனால் மீண்டும் ரணிலைப் பிரதமராக்கியதுடன் அந்தப்பணி முடிவடைந்து விட்டது. அதன்பின் ரணிலின் ஆட்சி தொடர, பட்ஜட்டுக்கு ஆதரவளிக்க ஏன் நம்பிரச்சினைகள் நிபந்தனையாக வைக்கப்படவில்லை?

ஏன் என்று அவர்களும் கூறவில்லை. சமூகமும் கேட்கவில்லையே ஏன்?

அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி அடிமை அரசியல் செய்வதுதான் முஸ்லிம் ஆரசியலா?

சாய்ந்தமருதுக்கு வாக்குறுதி வழங்கி நிறைவேற்றாததால் அது இரு சகோதர ஊர்களுக்கிடையேயான ஒரு பாரிய பிரச்சினையாக மாறி பல கசப்பான சம்பவங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமைக்கு காரணம் என்ன?

அரசிடம் கல்முனையை நான்காக பிரிக்கச் சொல்ல முடியாமல் போனமை. இது ஏற்கனவே இருந்தவற்றை மீண்டும் கேட்கின்ற ஒரு சாதாரண விடயம். ஆனால் ஏன் முடியவில்லை. தமிழ்த் தரப்பு விரும்பவில்லை.

கல்முனையின் பிரதிநிதித்துவம் முஸ்லிம்களிடம் இருக்கின்றது. நாம் தீர்மானத்தை எடுத்து அரசிடம் செய்யுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனாலும் அவர்களையும் அழைத்துப் பேச வேண்டும் என்று நாமே சொன்னோம். அவர்கள் அன்று இருந்ததையே இன்று பெற்றுக் கொள்ள தடைபோட்டார்கள். தடை தாண்ட முடியாமல் இரு ஊர்களை பலியாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் அவர்கள்!!!
கல்முனை முஸ்லிம்களின் இதயம். கல்முனையைப் பாதுகாப்பதற்காகவே கச்சேரியை ஒரு காலத்தில் இழந்தவர்கள் நாம். கல்முனைக்குடியில் எந்தவொரு அரச அலுவலகமும் இல்லை. 
பிரதேச செயலகம் கல்முனையில்
மாநகர சபை கல்முனையில்
கூட்டுறவுச் சங்கம் கல்முனையில்
பிரதான தபாற் கந்தோர் கல்முனையில்
அரச வங்கிகள் கல்முனையில்
விளையாட்டு மைதானம் கல்முனையில்
மார்கட் கல்முனையில்
முஸ்லிம்களின் வர்த்த கேந்திர நிலையம் கல்முனையில்

சுருக்கக் கூறின் முஸ்லீம்களின் மொத்த சொத்தும் கல்முனையில். காரணம் அது நம் இதயம். நம் முக வெற்றிலை.

அந்தக் கல்முனையில் அந்தக் கல்முனையை கட்டியெழுப்பிய MS காரியப்பரின் பெயரைக்கூட ஒரு கல்லில் பொறிக்க முடியாது.

இந்நிலையில் நம் இதயத்தையே துண்டாடி அவர்களுக்கு பிரதேச செயலகம் வேண்டும். அதற்காக பிரதமரை, சம்பந்தப்பட்ட அமைச்சரைச் சந்திக்கிறார்கள். அவர்கள் இது முஸ்லிம்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இடம். அவர்களுடனும் பேசவேண்டும் என்று ஒரு ஒப்புக்காவது நினைக்கவில்லை.

அவர்கள் தங்களைத் தாங்களே ஆள வேண்டும் என்பதற்காக முஸ்லிம்களை வங்காள விரிகுடா கடலுக்குள் எறியுங்கள் என்று எழுதாமல் எழுதப்பட்ட நகல் யாப்பை அவர்களை விடவும் நாமே நிறைவேற்றி விடத் துடிக்கின்றோம். அதற்கு, “அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்” என்று நியாயம் வேறு கூறுகின்றோம். ஆனால் அவர்கள் நம் இதயத்தையே கூறுபோட கொஞ்சம் கூட மனச்சாட்சியில்லாமல் முயற்சிக்கிறார்கள். அதற்கு இந்த பட்ஜட்டையே ஒரு ஆயுதமாக பாவிக்கிறார்கள்.

அவர்கள் முயலும்போது நாம் அப்பொழுதுதான் ஓடிச்சென்று ஒரு தற்காலிக தடையைப் போடுகின்றோம். அதை வைத்து பெரிய அரசியலே செய்கின்றோம்.

நாம் ஆட்சியின் ஆரம்பத்தில் அல்லது நம்பிக்கையில்லாப் பிரேரணை சமயத்தில் அல்லது கவிழ்ந்த அரசை மீண்டும் நிறுவிய போதாவது “கல்முனை மாநாகர சபையை நான்காகப் பிரியுங்கள், சட்ட விரோத தமிழ் பிரதேச செயலகத்தை மூடுங்கள் கொண்டுபோன அரச அலுவலங்கள், இழந்த காணிகள் அனைத்தையும் மீளக் கையளியுங்கள். இல்லை மன்னித்து விடுங்கள் எங்கள் ஆதரவை மறுதலிப்பதற்கு” என்று ஏன் சொல்ல முடியவில்லை?

கல்முனையை நான்காகப் பிரிக்காதவரை, சட்ட விரோத தமிழ்ப் பிரதேச செயலகத்தை மூடாதவரை கல்முனையின் பிரச்சினையைத் தீர்க்க முடியுமா? பிச்சைக்காரனின் புண்ணாக கல்முனைப் பிரச்சினையை வைத்திருக்கப் போகின்றீர்களா?

எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாதென்றால் எதற்காக கட்சி வைத்திருக்கிறீர்கள்? எதற்காக வாக்கு கேட்கிறீர்கள்? எதற்காக அரசில் இருக்கிறீர்கள்? அடுத்த தேர்தலில் நீங்கள் சாதித்த எதைச் சொல்லி வாக்கு கேட்கப் போகின்றீர்கள்? அவர்கள் எதைச் சாதித்தற்காக முஸ்லிம்கள் வாக்களிக்கப் போகிறீர்கள்?

எதிர்க் கட்சியில் இருந்துகொண்டு த தே கூ சாதிக்கும்போது நீங்கள் எதையும் சாதிக்க முடியாமல் இருக்கும் இரகசியம் என்ன?

வழமையாக ஆளும் கட்சிகள் சாதிக்கும்போது எதிர்க் கட்சிகள் வேக்காட்டை விமர்சனமாக வெளிப்படுத்தும். இந்த அரசில் நாம் ஆளும் கட்சி. கல்முனை நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதி. அங்கு கூட ஒரு துரும்பையும் அசைக்க முடியாமல் அழுகின்றோம். எதிர்க் கட்சி கல்முனையிலேயே வந்து நமக்கெதிராக சாதிக்க முனையும்போது அப்பொழுதுதான் கண்விழித்து இழைக்க, இழைக்க ஒடி, ஒரு தற்காலிக தடையைப் போட்டுவிட்டு பெரிதாக ஆர்ப்பரிக்கின்றோம்.

எதிர்க் கட்சி சாதிக்கிறது. ஆளுங்கட்சி வெறுமனே ஆர்ப்பரிக்கிறது. இனியும் பொறுக்க முடியாது.

பொறுத்தது போதும்
முஸ்லிம் கட்சிகளே!
இந்த ஆட்சிக்கு அதிகபட்சம் இன்னும் ஒரு வருட ஆயுள் இருக்கலாம். அதுவும் நாம் விரும்பினால் மட்டும். இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குப் பின் கிடைக்கும் என்று கூற முடியாது. எனவே, எஞ்சிய காலப்பகுதிக்கு ஆதரவளிப்பதானால் அடுத்த மூன்று மாத காலப் பகுதிக்குள் நமது பிரச்சினைகள் அனைத்தையும் அரசு தீர்க்க வேண்டுமென இப்பொழுதாவது நிபந்தனையை விதியுங்கள்.

பட்டியலை உடன் கையளியுங்கள்
1. கல்முனை மாநகர சபையை 1987இல் இருந்ததுபோன்று உடனடியாக நான்காகப் பிரிக்க வேண்டும். ஒருபோதுமே இருக்காத கல்முனைப் பிரிப்பை நம்மை சிறிதும் கணக்கில் எடுக்காது த தே கூ செய்ய முற்படும்போது கல்முனையைப் பிரிநித்துவப்படுத்தும் நாம், ஆளும் கட்சியான நாம் நியாயமாக, அன்று இருந்ததைக் கேட்பதில் என்ன தவறு. எதற்காக அவர்களுடன் பேச வேண்டும்?

2. அத்துடன் சட்டவிரோத தமிழ் பிரதேச செயலகம் உடனடியாக மூடப்பட வேண்டும். முஸ்லிம்களின் தலைநகரம் எனப் போற்றப்படுகின்ற கல்முனையிலே நியாயமான ஒரு விடயத்தை சாதிக்க முடியவில்லை என்றால் வேறு எங்கும் எங்களால் எதையும் சாதிக்க முடியாது.

3 நமது இழந்த காணிகள்.
கரங்கா
கருமலையூற்று
முசலி
பொத்துவில் 
வட்டமடு காணிப் பிரச்சினை 
சிலாவத்துறை காணி 
அனைத்தும் மீளளிக்கப்பட/ பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

அகற்றப்பட்ட அலுவலகங்கள் அவசரமாக மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்.

இவைகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றப்படாவிட்டால் அரசுக்கான ஆதரவு மீள் பரிசீலனை செய்யப்படும் என்ற அறிவித்தல் அரசுக்கு வழங்கப்பட வேண்டும்.

அத்தோடு ஒலுவில் மண் அரிப்பு, வடக்கு மீள்குடியேற்றம் போன்றவை மூன்று மாதங்களுக்குள் தீர்க்க முடியாது என்ற போதும் அவற்றிற்கான துரித தீர்வு காணப்பட வேண்டும். ஏனைய பிரச்சினைகளும் முடிந்தளவு தீர்க்கப்படவேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக உத்தேச அரசியல் யாப்பு மசோதா வடிவத்தில் பாராளுமன்றத்திற்கு வருமாயின் அதில் முஸ்லிம்களுக்குரிய காப்பீடுகள் இடம்பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்த நிபந்தனைகளை அவசரமாக அரசுக்கு இரண்டு முஸ்லிம் கட்சிகளும் முன்வைக்க வேண்டும். இல்லையென்றால் ஏன்? என்றாவது கூற வேண்டும்.

முஸ்லிம் சகோதரர்களே!
பள்ளிவாசல் நிர்வாகிகளே!
உலமாசபை அமைப்புகளே!
சிவில் அமைப்புகளே!

இந்த கட்சிகள் இந்த நிபந்தனைகளை முன்வைத்து தீர்வுக்கு முயற்சிப்பதை எவ்வாறு உறுதிப்படுத்தப் போகிறீர்கள்? உங்களுக்கும் கேள்வி கணக்கு இருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்?

பொதுமக்களே!
வாக்காளர் நீங்கள். இந்தக் கட்சிகளின் பலம் நீங்கள். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? இவர்கள் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமல் வந்தால் இவர்களை ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்களா? அல்லது இவர்களைத் தீர்வுடன் வர வற்புறுத்துவீர்களா?

இன்று மார்ச் 08. ஜூன் 08ம் திகதியளவில் நம்பிரச்சினைகள் தீருமா? இல்லையெனில் ஏன்?

ஒரு சமூகம் தன் தலைவிதியை தாமாக மாற்றிக் கொள்ளாதவரை அச்சமூகத்தின் தலைவிதியை இறைவன் மாற்றமாட்டான்.

இறுதியாக, முஸ்லிம்களின் ஒவ்வொரு விடயத்திலும் தடைபோடுகின்ற த தே கூ இற்கு தற்காலிகமாகவேனும் நீங்கள் பல விடயங்களில் வழங்கும் ஒத்துழைப்புக்களை நிறுத்துங்கள். அவர்களும் யோசிக்கட்டும்.

No comments:

Post a Comment