மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கோவில்குளம் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் ஆய்வு செய்யப்படும் பகுதியை புனித பகுதியாக அறிவிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கோவில்குளம் பகுதிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அங்கு தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ஆய்வு பணிகளை பார்வையிட்டார்.
கோவில்குளம் பகுதியில் கி.பி. 390ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் உள்ள ஆலயம் என சந்தேகிக்கப்படும் பகுதியின் பொருட்கள், அகழ்வுப்பணியின்போது தொல்பொருட்கள் திணைக்களத்தினால் கண்டறியப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் அப்பகுதியில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அனுராதபுர காலத்திற்கு முற்பட்ட கட்டடங்களின் சிதைவுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் பண்டைய பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் அவசர அவசரமாக கொட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே தொல்பொருட்கள் திணைக்களம் ஒரு குறுகிய பகுதிக்குள் இதனைச் செய்யாமல் விரிவுபடுத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இதேநேரம் இங்கு வருகை தந்த முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தொல்லியல் ஆய்வாளருமான செல்வி க.தங்கேஸ்வரியும் குறித்த பகுதியை பார்வையிட்டதுடன் அது தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டார்.
மண்முனையினை தலைநகராக கொண்டு கி.பி. 390ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் உலக நாச்சியார் என்பவர் ஆட்சி செய்து வந்ததாகவும் அவரினால் சிவாலயம் ஒன்று இப்பகுதியில் கட்டுவிக்கப்பட்டதாகவும் தங்கேஸ்வரி தெரிவித்தார்.
அந்த சிவாலயம் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். குறித்த பகுதி புனித பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டு அப்பகுதி முழுமையான ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment