ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவையும் பொதுஜன பெரமுனக் கட்சியினரையும் காப்பாற்றும் நோக்கிலேயே தற்போது செயற்பட்டு வருகிறார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முஜிபூர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், இதனாலேயே ஜெனீவா தீர்மானத்துக்கு அவர் எதிர்ப்பினை வெளியிட்டு வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில், நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஜெனீவாவுக்கு செல்லும் முன்னர், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஜனாதிபதியைச் சந்தித்து, இலங்கை விவகாரம் குறித்து கலந்துரையாடினார்.
தற்போது, ஜெனீவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இது ஏன் என்று தெரியவில்லை. ஒரு விடயம் மட்டும் உறுதியாக இருக்கிறது. அதாவது, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது நாம் வெற்றிபெறச் செய்த ஜனாதிபதி அல்ல தற்போது இருப்பவர். தற்போது இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் நோக்கத்திற்காக செயற்படும் ஒருவராகவே இருக்கிறார்.
இதனால்தான், இவர்கள் இருவரது யோசனையும் மாறுபடாமல் இருக்கிறது. 2015ஆம் ஆண்டு முடிக்க வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி பேசிவருகிறார்.
இவரது அரசியல் கொள்கைகள் எல்லாம் முற்றாக மாற்றமடைந்துள்ளன. தாமரை மொட்டுக் கட்சியினரின் தேவைக்கு இணங்கவே அவர் செயற்படுகிறார்.
2015ஆம் ஆண்டு முதல் 2018 ஒக்டோபர் மாதம் வரையான ஜெனீவா அமர்வுகள் குறித்து ஜனாதிபதி எந்தவொரு எதிர்ப்பினையோ அல்லது விமர்சனத்தையோ முன்வைக்கவில்லை.
இப்போது பார்த்தால், கடந்த கால ஐ.நா. அமர்வுகள் குறித்தெல்லாம் அவர் குற்றங்களை சுமத்தி வருகிறார். அவர் அரசியல் ரீதியாக முற்றாகக் குழம்பியுள்ளார். இதனால், தற்போது நாமும் அவருக்கு வித்தியாசமாகத்தான் தென்படுகிறோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment