நாட்டில் பொருளாதார நெருக்கடியல்ல, பொருளாதார சவால்களே உள்ளன, சவால்களை வெற்றி கொள்ள அரசாங்கம் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது - அமைச்சர் மங்கள சமரவீர - News View

About Us

About Us

Breaking

Thursday, March 7, 2019

நாட்டில் பொருளாதார நெருக்கடியல்ல, பொருளாதார சவால்களே உள்ளன, சவால்களை வெற்றி கொள்ள அரசாங்கம் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது - அமைச்சர் மங்கள சமரவீர

நாட்டில் பொருளாதார நெருக்கடியல்ல, பொருளாதார சவால்களே உள்ளன. இந்தச் சவால்களை வெற்றி கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அதற்கிணங்கவே இம்முறை வரவு செலவுத் திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு செலவுத் திட்டமாக இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது வரவு செலவுத் திட்டமே என குறிப்பிட்ட அமைச்சர், பொருளாதாரத்தைப் பலப்படுத்தி நாட்டை முன்னேற்றுவதுடன் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை பலப்படுத்தும் வகையிலேயே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இதுவரை குறிப்பிடத்தக்க விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்பதால் இது எதிர்க் கட்சி உட்பட அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சிறந்ததொரு வரவு செலவுத் திட்டமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ண, நிதியமைச்சின் அரச நிதியம் தொடர்பான பணிப்பாளர் நாயகம் விமலேந்திரராஜா உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், சமூக பாதுகாப்பு, சமூக பொருளாதாரத்தை முறைப்படுத்தும் வகையில் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் யோசனைகள் முன்வைக்கப்பட்டது. அரசாங்கம் என்டபிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தை கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தியது. 21ஆம் நூற்றாண்டில் பொருளாதார கேந்திரமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்காக பல்வேறு செயற் திட்டங்கள் இதனூடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

குறைந்த வருமானம் பெறுவோரை பலப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்குள்ளது. அதனால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சில தரப்பினரால் பிரசாரம் செய்யப்படுகிறது. உண்மையில் அவ்வாறு இல்லை. தேர்தல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டு மக்களை பலப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. அதற்காக நாம் கைகொடுத்துள்ளோம். 

பட்டினியால் உள்ள ஒருவருக்கு மீனொன்றை கொடுப்பதை விட தூண்டில் ஒன்றை கொடுப்பது சிறந்ததல்லவா? அதனையே நாம் செய்துள்ளோம். எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் வரலாம். அதற்கு முன்னர் பொதுத் தேர்தலும் வரலாம். எனினும் தேர்தலை இலக்காகக் கொண்டு நாம் செயற்படவில்லை.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மூன்று கருத்தரங்குகளில் நான் கலந்துகொண்டுள்ளேன். இந்த வரவு செலவுத் திட்டம் சிறந்ததென்றே அங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. கடந்த இரண்டு தினங்களாக பாராளுமன்றத்திலும் கூட எதிர்க் கட்சிகள் பெரிதாக குரலெழுப்பவுமில்லை. அவர்களில் சிலர் இது சிறந்த வரவு செலவுத் திட்டமென கூறுகின்றனர். 

நாமே மீண்டும் அரசாங்கம் அமைப்போம் என்ற நம்பிக்கையிலேயே இந்த வரவு செலவுத் திட்டத்தை நாம் சமர்ப்பித்துள்ளோம். அரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு 10,000 ரூபா கொடுப்பனவு ஒன்றை நாம் வழங்கினோம். தற்போது 2,500 ரூபா கொடுப்பனவை வழங்கியுள்ளோம். அமைச்சின் செயலாளர்களின் சம்பளமும் கூடியுள்ளது. அரசாங்க ஊழியர்களுக்கான 2,500 ரூபா கொடுப்பனவு ஜூலை 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ள ஜனாதிபதி சம்பள ஆணைக்குழுவின் அறிக்கை எமக்கு கிடைத்துள்ளது. அது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். 

அரசாங்கம் பெரும் கடன் தவணைகளை செலுத்த வேண்டியுள்ளது. இந்த வருடத்தில் கடனுடன் போராடியே இத்தகைய வரவு செலவுத் திட்டத்தை நாம் சமர்ப்பித்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment