போதைப்பொருள் பாவனை தொடர்பில் தகவல் வழங்கிய பாடசாலை மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அவரது பாடசாலையில் கிளிநொச்சி பொலிஸாரின் ஏற்பாட்டில் கடந்த 23 ஆம் திகதி போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, குறித்த மாணவர் தமது கிராமத்தில் போதைப் பொருள் பாவனை அதிகம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில் அந்த மாணவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை (26) கடைக்கு சென்றிருந்த போது மாணவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான மாணவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைகளின் பின்னர் இன்று வீடு திரும்பினார்.
இதேவேளை, குறித்த மாணவருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் கடந்த 27 ஆம் திகதி மூன்று பெண்கள் கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment