கல்முனை மின்சார அலுகலத் திறப்பு விழா - இரத்தானதற்கு யார் பொறுப்புதாரிகள்? - News View

About Us

About Us

Breaking

Friday, February 1, 2019

கல்முனை மின்சார அலுகலத் திறப்பு விழா - இரத்தானதற்கு யார் பொறுப்புதாரிகள்?

இலங்கை மின்சார சபையினால் கல்முனையில் நிர்மாணிக்கப்பட்டு இன்று (01) திறந்து வைக்கப்படவிருந்த புதிய அலுவலகம் திறக்கப்படாமை கவலை தருகிறது. இந்தக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு பிரதம மின்பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அதனை நாம் பராட்ட வேண்டும்.

இதேவேளை, இந்த அலுவலகம் திட்டமிட்டபடி இன்று திறக்கப்படாமையின் பின்னணில் அரசியல்வாதி ஒருவரே காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, இராஜாங்க அமைச்சர் எம்.எச். எம். ஹரீஸ் அவர்கள் மீதே பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதாவது, குறித்த திறப்பு விழாவுக்கு தன்னை அழைக்கவில்லை என்பதால் விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களைத் தொடர்பு கொண்டு திறப்பு விழாவை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தியதன் காரணமாகவே திறப்பு விழா இரத்துச் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களை நான் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் தன்மீதான குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்தார். இந்த திறப்பு விழா இரத்துச் செய்யப்பட்டதற்கும் தனக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், குறித்த மின்சார சபை அலுவலகக் கட்டடத்தை இன்று (01) திறப்பதற்கு திகதியிடப்படவில்லை என்றும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ள மின்சக்தி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களால் திறந்து வைக்கப்படவே திட்டமிடப்பட்டிருந்ததாகத் தனக்கு அறியக் கிடைத்ததாகவும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் என்னிடம் தெரிவித்தார்.

இதனடிப்படையில் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி குறித்த கட்டடத் தொகுதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது என்று தனக்கு தகவல் கிடைத்ததாகவும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் என்னிடம் கூறினார்.

இதேவேளை, மின்பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் அவர்களைத் தொடர்பு கொண்டு அவரது கருத்துக்களைப் பெற முயற்சித்தேன் முதலில் எனது தொலைபேசிக்கு பதிலளித்த அவர், சற்று நேரத்தில் தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறு என்னைக் கேட்டுக் கொண்டார். 

அதன்படி பின்னர் பலமுறை நான் அவருடன் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர் பதிலளிக்கவில்லை. அவர் ஓர் அரச அதிகாரி, இவ்வாறான விடயங்களுக்கு கருத்துத் தெரிவிப்பதால் தனக்கு சில பாதிப்புகள் ஏற்படும் என்று அவர் கருதி இந்த விவகாரம் தொடர்பில் எதனையும் கூற விரும்பாதிருக்கலாம். அதில் நியாயமுண்டு.

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

No comments:

Post a Comment