மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குறைபாடுகளைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் ஒன்றை மேற்கொண்ட சுமந்திரன், வைத்தியசாலை எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இதன்போது, வைத்தியர்கள் பற்றாக்குறை, திண்மக்கழிவுகளை அகற்றுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், வைத்தியசாலைக்கு வைத்தியர்களை நியமிக்க நடவடிக்கையெடுக்கும்போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதற்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறைகள் குறித்தும் இதன்போது கவனஞ்செலுத்தப்பட்டது.
குறித்த பிரச்சினைகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இதுகுறித்து விரைந்து தீர்வைப்பெற்றுக்கொடுக்க சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடுவதாக தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கம் உட்பட்ட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், வைத்திய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தாதியர் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment