எமது தாய் நாடான இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி வெளியிடுவதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மகிழ்ச்சியடைவதாக, அதன் பொதுச்செயலாளர் அஷ் ஷெய்க் எம்.எம்.ஏ. முபாறக் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மெளலவி முபாறக் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நம் தாய் நாட்டுக்கு இந்த சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்க பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவத் தலைவர்கள் ஒன்றிணைந்து இன, மத, பேதங்களுக்கு அப்பாற்பட்டு, தியாக உணர்வோடு ஒற்றுமையாகச் செயற்பட்டனர். இப்படியாகச் செயற்பட்டவர்கள் நமது சுதந்திர தின நிகழ்வுகளில் ஞாபகம் செய்யப்படுவது கட்டாயமாகும்.
இதே நேரம், எமது முன்னோர்கள் இன, மத, பேதங்களைக் களைந்து, நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடியதைப் போன்று நாமும் இன, மத மற்றும் அரசியலுக்கு அப்பாற் சென்று, தாய் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட முன் வர வேண்டும் என, நாட்டின் அனைத்து மக்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.
குறிப்பாக, முஸ்லிம்கள் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய எமது முன்னோர்களான ரீ.பீ. ஜாயா, சேர். ராஸிக் பரீத் போன்றோர்களின் முன்மாதிரிகளைக் கடைப்பிடித்து, நாட்டிற்காக தம்மை அர்ப்பணிப்பவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என, ஜம் - இய்யா எதிர்பார்க்கின்றது.
பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்த்தவர்கள் எனப் பல்லின மக்கள் வாழுகின்ற இந்நாடு என்றும் செழிப்புடனும், அபிவிருத்தியுடனும் திகழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும், பிராத்தனைகளுமாகும்.
ஒரு நாட்டின் அபிவிருத்தியும், செழிப்பும் அந்நாட்டு மக்களின் ஒற்றுமையிலும், நாட்டுப்பற்றிலுமே தங்கியுள்ளது என்பதை ஜம்இய்யா ஞாபகம் செய்து கொள்ள விரும்புகின்றது.
எனவே, இந்நாட்டில் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும் கட்டியெழுப்பி பரஸ்பர விட்டுக் கொடுப்புடன் அனைத்து இன மக்களும் ஒரு தாய்ப் பிள்ளை போல் வாழ, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நல்லாசி கூறுகிறது. இதே போன்று, நம் நாடு சகல வளமும் பொருந்திய ஐக்கிய இலங்கையாக மிளிரவும் மேலும் பிராத்திக்கின்றது.
ஐ. ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment