தோட்டத் தொழிலாளர் சம்பளம் விடயம் தொடர்பில் அரசுக்கு 3 நாள் கால அவகாசம் - சரியான முடிவு எட்டப்படாவிடில் அரசியல் தீர்மானம் முன்னெடுப்போம் - News View

About Us

About Us

Breaking

Friday, February 8, 2019

தோட்டத் தொழிலாளர் சம்பளம் விடயம் தொடர்பில் அரசுக்கு 3 நாள் கால அவகாசம் - சரியான முடிவு எட்டப்படாவிடில் அரசியல் தீர்மானம் முன்னெடுப்போம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் தீர்மானம் ஒன்று எட்டப்படாவிட்டால் அரசியல் ரீதியாக தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு தீர்மானமொன்றை முன்னெடுக்கும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஹற்றனில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் முடிவொன்று எட்டபடாத பட்சத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற ஆறுபேரும் ஒரே மாதிரியான தீர்மானத்தை எடுக்க தாயாராக உள்ளோம். 

இதேவேளை, நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது எவ்விதமான சம்பள உயர்வையும் வழங்க முடியாது என முதலாளிமார் சம்மேளனம் கூறுவது எந்த வகையிலும் நியாயமானதல்ல. 

ஆனால் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, அனைத்து கொடுப்பனவும் சேர்த்து 940 ரூபா வழங்க முடியுமென கூறினார். 

ஆனால் இறுதியில் தோட்ட தொழிலாளர்களின் சம்பளமாக 750 ரூபாவுக்கு கைச்சாதிட்டிருக்கிறார்கள். நாங்கள் வரவுக்கான கொடுப்பனவு 60 ரூபாவும் உற்பத்தித் திறன் கொடுப்பனவு 140 ரூபாவையும் வழங்குமாறுதான் கூறுகிறோம்.

இந்தக் கொடுப்பனவுகளை தொழிலாளர்களுக்கு கம்பனிகளால் வழங்க முடியும். எனவே நாங்கள் இன்னும் மூன்று தினங்கள் காத்திருப்போம். சம்பள உயர்வு வழங்க முடியாத பட்சத்தில் இதற்கான முடிவை நாங்கள் வெகுவிரைவில் வெளிபடுத்த இருக்கின்றோம். இந்த கூட்டு ஒப்பந்த முறையே பிழையானது. ஆகவேதான் சட்டத்தரணி தம்பையா நீதிமன்றம் சென்றபோது கூட இதற்கு தலையிட முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டது.

கூட்டு ஒப்பந்தத்தில் எங்களுக்கு தலையிட முடியாது. ஆகவேதான் நாங்கள் அரசியல் ரீதியாக பேச்சுவார்தைகளை மேற்கொண்டு வருகின்றோம். நிச்சயம் நாங்கள் கோருகின்ற கொடுப்பனவு கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

No comments:

Post a Comment