வறிய மக்களின் நலன் கருதி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் அவர்களின் முயற்சியின் பலனாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வீடுகள் இல்லாத வறிய மக்களின் நலன் கருதி 300 வீட்டுத் திட்டத்தை வழங்கியுள்ளார்.
அதன் முதற்கட்டமாக கல்முனை பிராந்திய தேசிய வீடமைப்பு அதிகார சபை பிரதிநிதிகள் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பிரதேச செயலாளர், காணி அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான விசேட கலந்துரையாடல், அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் பங்குபற்றலில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் 29/01/2019 அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நடைமுறைப்படுத்துகின்ற இத்திட்டமானது முழுமையான மானிய அடிப்படையில் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், சம்புநகர், அஷ்ரப் நகர் போன்ற பிரதேசங்களில் வீட்டுத் திட்டத்திற்கு தகுதியான வறிய மக்களினை அடையாளம் கண்டு அதற்கான காணிகளையும் அடையாளப்படுத்தி அக் கிராம பிரிவுக்கு பொறுப்பான EDO, GN, SDO ஆகியோர் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து விரைவாக தரவுகள் அடங்கிய பெயர் பட்டியலை வழங்குவதன் ஊடாக இத்திட்டத்தை விரைவாக மக்களுக்கு வழங்க முயற்சிகள் எடுக்கமுடியும். என குறிப்பிட்டார்.
இக் கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பிரதிநிதிகள், கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினரின் வெகுசன தொடர்பு அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment