மலையக கட்சிகளுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான ஆணவப் போரே, தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை நீடிக்க காரணம் என, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவு தொடர்பான வாரமொரு கேள்விக்கு பதலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ”மலையக மக்களின் சகல கட்சிகளும் தொழிற்சங்கங்களும் அவற்றின் தலைமைத்துவங்களும் சேர்ந்து தம் மக்களின் கோரிக்கை பற்றி எவ்வித பேதமுமின்றி பொதுவான வேண்டுகோளை விடுக்க வேண்டும். ஆனால், அவ்வாறானதொரு ஐக்கியமான கோரிக்கைளை அவர்கள் விடுத்ததாக இல்லை.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாட் கூலியாகக் கிடைக்க வேண்டும் என்பதிலும் பார்க்க, அதனை யார் பெற்றுக் கொடுக்கப் போகின்றார்கள் என்பதிலேயே தோட்டத் தொழிலாளர்களின் தலைமைகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள் போல் எனக்குத் தெரிகின்றது.
கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஆணவப் போர்களில் ஈடுபட்டு, அரசியல் முரண்பாடுகளில் உழன்று கொண்டு இருக்கின்றார்கள். மலையகக் கட்சிகள் பலவற்றின் தலைவர்கள் என் அன்புக்குரியவர்கள். ஆனால் அவர்களின் ஒற்றுமையற்ற செயற்பாடுகள் என் மனதை வருத்துகின்றது.
சகல கட்சிகளின் தலைவர்களும் ஒன்று சேர்ந்து தமது மக்கள் நலனை முன்னிட்டு தோட்ட முதலாளிமார்களுடனும் அரசாங்கப் பிரதிநிதிகளுடனும் பேச வேண்டும். அல்லது எல்லோரும் சேர்ந்து ஒரு சிரேஸ்ட சட்டத்தரணியைப் பேச விட வேண்டும்.
மலையகத் தமிழர்களுக்கு உண்மையில் நாளாந்தம் ஆயிரத்து 200 ரூபாய் கொடுப்பனவேனும் வழங்கப்பட வேண்டும்.
உண்மையில் கொடுப்பனவு வழங்க முதலாளிமாருக்கு நிதி பற்றாக்குறை நிலவுவதாயின் அரசாங்கம் தலையிட்டு நிதியுதவிசெய்ய வேண்டும். நாட்டின் மொத்த வருமானத்திற்குப் பங்களிப்பவர்கள் தோட்டத் தொழிலாளர்கள். அவர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தி தோட்டங்களின் பராமரிப்பை விருத்தி செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment