இன்று நாங்கள் வந்திருப்பதுமலையாளபுரத்துக்கு என்றாலும் உண்மையில் இது மலையகபுரமாகவே தெரிகிறது என்று நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் மழை வெள்ளத்தால் பாதிப்புற்று தற்காலிக வதிவிடங்களில் வாழும் மக்களுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஏற்பாட்டில் இருபது லட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.ஶ்ரீதரனின் வேண்டுகோளின்பேரில் கரைச்சி, மலையாளபுரம் மக்களுக்கு மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோர் ஊடாக பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதுபோல எண்பதுகளில் ஒரு வெள்ளம் ஏற்பட்டது. அதில் அகப்பட்டிருக்காவிட்டால் நானும் இன்று உங்களில் ஒருவனாகவே வாழ்ந்திருப்பேன்.
மலையகத்தில் வட்டகொடையில் இருந்து புலம்பெயர்ந்து வட்டக்கச்சியில் வாழ்ந்த எங்கள் தாத்தா குடும்பத்தாருடன் நாங்களும் 83 வன்முறைகளின் பின்னர் இணைந்து கொண்டோம். அப்போது நான் சென்.திரேசா கல்லூரியின் ஆரம்ப பிரிவில் கல்வி கற்றேன்.
அப்போதும் இரணைமடுகுளம் உடைப்பெடுத்து பெருவெள்ளம் ஏற்பட்டது. வீடுகள், வீதிகள் முற்றாக சேதமுற்றன. அத்தோடு நாங்கள் மீண்டும் மலையகம் சென்றுவிட்டோம். அன்று அப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்காவிட்டால் நான் இன்றும் வட்டக்கச்சி காரனாகவே அறியப்பட்டிருப்பேன்.
கிளிநொச்சியின் பல பகுதிகளில் எழுபது, எண்பதுகளில் மலையகத்தில் இருந்து புலம்பெயர்ந்த மலையகத் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் பல மலையகத்தை ஒத்ததாகவே இன்றும் உள்ளது.
அவர்களின் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் குறித்து எம்முடன் இன்று கலந்துரையாடினர். அரசியலில் உரிமைசார் விடயங்களுக்கு குரல் கொடுக்கும் அதேவேளை சாதாரண மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே எங்களது அரசியல் நிலைப்பாடு.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக கிளிநொச்சியில் வாழும் எமது உறவுகளுக்கும் எமது உதவிகளை செய்ய கடப்பாடு கொண்டுள்ளோம். எம்மிடையேயான உறவுகள் புதுப்பிக்கப்பட வேண்டிய தேவைப்பாடுகளும் இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment