தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாகக் கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய கூட்டு ஒப்பந்தத்தை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதென அமைச்சர் மனோ கணேசன் இறக்குவானையில் தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்குச் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்தக் கூட்டு ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகவும் தொழிலாளர்களின் விருப்புக்கு மாறாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இறக்குவானை பரி.யோவான் கல்லூரியில் நேற்று (29) நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார்.
கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாள் மலையகத்தின் சோக தினம். இந்தக் கூட்டுக் களவானிகளுக்குத் துணைபோவோர் யாராக இருந்தாலும் அதனை வன்மையாகக் கண்டிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தில் இணைந்திருந்தாலும், கூட்டுக் களவானிகளுக்கு துணைபோவது யாராக இருந்தாலும் அதற்கு வன்மையான எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
உண்மையில், தோட்டக் கம்பனிகளுக்கு 150 மில்லியன் ரூபாயை அரசாங்கம் வழங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை மக்களிடம் கொடுத்திருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.
பரி.யோவான் கல்லூரிக்குப் புதிய கேட்போர் கூடத்தை அமைக்கவும் அதனை தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த அமைச்சர்.
எதிர்காலத்தில் கணிதம், விஞ்ஞானம் பாடங்களைப் போதிப்பதற்கான ஆசிரியர்களை இந்தியாவில் வரவழைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதேநேரம், உள்ளூரில் பொருத்தமான பட்டதாரிகள் இருப்பின் அவர்களுக்கு நியமனம் பெற்றுக் கொடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment