நாடு முழுவதிலுமுள்ள சட்டவிரோத ஆயுதங்களைக் களையும் நோக்கில் மூன்று மாதகால விசேட சுற்றிவளைப்பு தேடுதலை முன்னெடுக்கவிருப்பதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்தி இடம்பெறும் கொலைகளைத் தடுக்கும் நோக்கிலேயே இத்தேடுதலை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற புதுவருட வேலைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே பொலிஸ் மா அதிபர் இவ்வாறு கூறினார்.
2018ஆம் ஆண்டில் பல்வேறு படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் 90 வீதமான சம்பவங்களின் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களைக் கைது செய்துள்ளபோதும் பெருந்தொகையான சட்டவிரோத ஆயுதங்கள் இன்னும் நாட்டிற்குள் பாவிக்கப்படுகின்றன. இவற்றை அவசரமாகக் களைய வேண்டியுள்ளது.
இந் நோக்கில் விசேட சுற்றிவளைப்புத் தேடுதலை நடத்த உள்ளோம். தேடுதல் நடவடிக்கையில் சிறப்பாக செயற்பட்டு அதிகமான சட்டவிரோத ஆயுதங்களை மீட்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு நிதி ரீதியான பரிசுகள் வழங்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், வீதி விபத்துக்கள் நாளாந்தம் அதிகரித்துள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 8 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழக்கின்றனர். இந்த விபத்துக்களைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.
இதற்கென வீதிப் போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் வினைத்திறனாக செயற்படுவர் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். மக்கள் நிம்மதியான சூழலில் வாழ்வதற்குப் பொலிஸார் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் துறைசார் நிபுணர்களாக செயற்பட வேண்டியிருப்ப தாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் படைத் தலைமைப் பொறுப்பை தான் ஏற்கும்போது குற்றங்கள் தீர்க்கப்படுவது 60 வீதமாகக் காணப்பட்டது. 2018ஆம் ஆண்டில் இது 75 வீதமாக முன்னேற்றம் கண்டுள்ளது.
போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவரப் படுவதைத் தடுப்பதற்கும் அதனைக் கட்டுப் படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் பொலிஸாருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், இவ் வருடத்தில் தொடர்ந்தும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்த உள்ளதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment