எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக போராட்டம் நடத்தப் போவதுமில்லை, நீதிமன்றத்தை நாடவும் மாட்டோம் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 3, 2019

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக போராட்டம் நடத்தப் போவதுமில்லை, நீதிமன்றத்தை நாடவும் மாட்டோம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக போராட்டங்கள் எதனையும் நடத்தப் போவதுமில்லை, நீதிமன்றத்தை நாடப்போவதுமில்லையென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கிளிநொச்சியில் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது. 

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தயா கமகே, இராஜாங்க அமைச்சர் விஜயகலா, பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே மாவை சேனாதிராஜா எம்.பி இதனைக் குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்காக நாங்கள் பெரும் போராட்டங்கள் எதனையும் நடத்தப் போவதில்லை. எமது நோக்கமும் அதுவல்ல.

புதிய எதிர்க்கட்சி நியமனம் தொடர்பில் நாம் அரசியலமைப்பு ரீதியாகவும், தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையிலுமே பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினோம்.

ஜனாதிபதியோ, பிரதமரோ, பாராளுமன்ற உறுப்பினரோ எவராக இருந்தாலும் ஒரு கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றபின்னர் அக்கட்சியிலிருந்து விலகினால் அவர் தன்னுடைய உறுப்புரிமையை இழப்பார். அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இடமுண்டு. அதைத்தான் எங்கள் தரப்பிலிருந்து பாராளுமன்றத்தில் எழுப்பியிருந்தார்கள்.

மகிந்த ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சி சார்பிலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். அவர் அக்கட்சியிலிருந்து வேறு கட்சியில் இணைந்துகொண்டால் அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் போகும். இதனையே எடுத்துக் கூறினோம்.

இருந்தபோதும் இந்த விவகாரத்தில் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. சிலர் அதனை நீதிமன்றம் சென்று தான் தீர்க்க முடியும் என்கிறார்கள். ஆனால் நீதிமன்றம் சென்று எதிர்க் கட்சித் தலைவர் பதவியை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் எங்களுக்கு இல்லை என்றார்.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி புதிய அரசியலமைப்புக்கான வரைபை சபையில் முன்வைப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். அதனை முன்வைத்த பின்னரே அது தமிழ் மக்களாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குமா ? என்பதை ஆராய முடியும். பெப்ரவரி 4ஆம் ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அது பற்றி ஆராய முடியும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment