அமைச்சரவை யோசனைகளை பிரதமர் தலைமையிலான குழுவில் ஆராய்ந்து சமர்ப்பிக்க வேண்டும் - காமினி ஜயவிக்கிரம பெரேராவின் புதிய பரிந்துரை - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 1, 2019

அமைச்சரவை யோசனைகளை பிரதமர் தலைமையிலான குழுவில் ஆராய்ந்து சமர்ப்பிக்க வேண்டும் - காமினி ஜயவிக்கிரம பெரேராவின் புதிய பரிந்துரை

அரசாங்கத்தின் முக்கியமான யோசனைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க முன்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அமைச்சரவை பத்திரங்களை ஆராயும் குழுவொன்று நியமிக்கப்பட்டு மக்களுக்கு அத்தியாவசியமான அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்தகைய அத்தியாவசியமான அமைச்சரவை யோசனைகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு மாதங்களாக நாட்டில் நிலவிய மோசமான அரசியல் நெருக்கடிகள் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை மட்டுமன்றி நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் தற்போதைய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அத்தியாவசியமான யோசனைகள் விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் அதற்கான மேற்படி குழு ஐக்கிய தேசிய முன்னணி மூலம் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசியல் ஸ்திரமற்ற தன்மையினால் நிறைவேற்ற முடியாது போன வரவுசெலவுத் திட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், முன்வைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. 55 நாட்களே ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் செயற்பாட்டினால் நாட்டின் சுற்றுலாத்துறை, ஏற்றுமதித் துறை மற்றும் அந்நிய செலாவணி மற்றும் வெளிநாட்டு உறவுகள் ஆகியவற்றில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கேற்ப வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு ஜனாதிபதியின் ஆதரவும் மிகவும் முக்கியமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment