தேசிய அடையாள அட்டைக்கான படங்கள் இன்று முதல் ஒன்லைனில் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 1, 2019

தேசிய அடையாள அட்டைக்கான படங்கள் இன்று முதல் ஒன்லைனில்

தேசிய அடையாள அட்டைக்கான படங்கள் ஜனவரி முதலாம் திகதி முதல் ஒன்லைன் மூலமே பெற்றுக் கொள்ளப்படுமென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

இதற்கமைய தேசிய அடையாள அட்டைக்கான படங்கள் ஆட்பதிவு திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 2100 புகைப்பட கலையகங்களில் மட்டுமே எடுக்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.

தேசிய அடையாள அட்டைக்கான படங்களின் பிரதிகளைக் கலையகங்களிலிருந்து பெற்று, அவற்றை விண்ணப்பங்களில் ஒட்டி கிராம உத்தியோகத்தரிடம் கையொப்பம் பெறும் முறையே இதுவரை நடைமுறையில் இருந்தது. எனினும் இன்று முதல் இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கலையகங்களில் பிடிக்கப்படும் படங்கள் நேரடியாக ஒன்லைன் மூலமாக ஆட்பதிவு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பதாரருக்கு அதற்குரிய இலக்கத்துடனனான பற்றுச்சீட்டு மட்டுமே வழங்கப்படும். 

விண்ணப்பத்துடன் அப்பற்றுச்சீட்டை இணைத்து கிராம உத்தியோகத்தரிடம் கையொப்பம் பெற்று ஆட்பதிவு திணைக்களத்துக்கு அனுப்புமிடத்து, விண்ணப்பதாரியின் படம் நேரடியாக தேசிய அடையாள அட்டையுடன் இணைக்கப்படுமென்றும் அவர் விளக்கமளித்தார்.

திட்டமிட்டு படங்களை மாற்றுவதன் மூலம் இடம்பெறக்கூடிய முறைப்பாடுகளை இந்தப் புதிய முறை மூலம் தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்குமென்றும் அவர் கூறினார்.

இதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு விநியோகம் நேற்று (31) முதல் நிறுத்தப்பட்டதையடுத்து இன்று ஜனவரி முதலாந்திகதி முதல், அனைத்து நாடுகளுக்கான கடவுச்சீட்டு மாத்திரம் வழங்கும் பணியை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் ஆரம்பிக்கின்றது.

இதற்கமைவாக மத்திய கிழக்கு நாடுகளுக்கென இதுவரை காலமும் விநியோகிக்கப்பட்டு வந்த கடவுச்சீட்டு முறை நேற்றுடன் நிறுத்தப்படுள்ளது.

இன்று முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்கள் மாத்திரமே விநியோகிக்கப்படும் என்றும் இனி தொடர்ந்து இது நடைமுறையிலிருக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment