போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக இரு வாரங்களில் சட்டத்திருத்தம் - ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 2, 2019

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக இரு வாரங்களில் சட்டத்திருத்தம் - ஜனாதிபதி

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனை போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக இன்னும் இரண்டு வாரங்களில் கடுமையான சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலனறுவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி இதுகுறித்து தொடர்ந்து குறிப்பிடுகையில், ”போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான நடவடிக்கைகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு நாம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த சில மாதங்களாக நாட்டில் தொடர்ச்சியாக போதைப்பொருள் கைப்பற்றப்படுகிறது.

இவையனைத்தும், போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பாரிய செயற்பாடுகளாகவே கருதப்படுகிறது. இதற்காக, அனைத்துத் தரப்பினருக்கும் நாம் எவ்வகையான ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தயாராகவே இருக்கிறோம்.

போதைப்பொருள் பாவனைக்கு முக்கிய காரணமாக இருப்பது சட்டத்தில் உள்ள குறைபாடேயாகும். எனவே, இதற்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்களை கொண்டுவரவும் நாம் தீர்மானித்துள்ளோம்.

நான் பொலிஸ் துறைக்கு பொறுப்பான அமைச்சை தற்போதுதான் ஏற்றுக்கொண்டுள்ளேன். இந்நிலையில், போதைப்பொருட்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்கத் தயாராகவே இருக்கிறேன். மேலும், இந்த விடயம் தொடர்பில் நான் பாதுகாப்புச் செயலாளருடனும் தற்போது கலந்துரையாடியுள்ளேன்.

அந்தவகையில், இரண்டு வாரங்களில் போதைப்பொருட்களுக்கு எதிரான சட்டத்தில், சில கடுமையான திருத்தங்களை மேற்கொண்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளோம்.

பெப்ரவரி மாதத்துக்கு முன்னர், இதனை அமைச்சரவையின் அனுமதியுடன் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் பணித்துள்ளேன்” என்றார்.

No comments:

Post a Comment