தேசிய தினம் : இன்று முதல் தேசிய கொடியை பறக்கவிடுங்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 31, 2019

தேசிய தினம் : இன்று முதல் தேசிய கொடியை பறக்கவிடுங்கள்

நாட்டின் 71ஆவது சுதந்திர தினத்தையொட்டி இன்று முதல் ஒரு வார காலத்திற்கு அனைத்து அரச நிறுவனங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள், வீடுகளிலும் தேசிய கொடியைப் பறக்க விடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டின் 71ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4ம் திகதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளதுடன் அதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்

சுதந்திர தினத்தை முன்னிட்டு காலிமுகத்திடலை அண்மித்த வீதிகளில் நேற்று முதல் சுதந்திர தினமான எதிர்வரும் 4ஆம் திகதி வரை விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தேசிய தின நிகழ்வு ஒத்திகைகளின் காரணமாக கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதிகளில் நேற்று கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

எதிர்வரும் 3 ஆம் திகதி வரை ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறுவதால் சில வீதிகள் மூடப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடல் சுற்றுவட்டம் முதல் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையிலும் சைத்திய வீதியூடாகவும் வாகனங்கள் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாகனங்கள் கொள்ளுப்பிட்டி சந்தியால் காலிமுகத்திடல் நோக்கி பிரவேசிப்பதற்கும், சென். மைக்கல்ஸ் வீதியால் காலிமுகத்திடல் நோக்கிப் பயணிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

செரமிக் சந்தியூடாக பழைய பாராளுமன்றம் நோக்கி பயணிப்பதற்கும் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யோர்க் வீதியால் இலங்கை வங்கி மாவத்தைக்குள் பிரவேசிப்பதற்கும் சீனோர் சந்தியால் கோட்டை ரயில் நிலைய வீதியூடாக மத்திய தபால் பரிமாற்று நிலைய சந்தியூடாக செரமிக் சந்திக்குள் பிரவேசிப்பதற்கும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படமாட் டாது.

மாக்கான் மாக்கார் வீதி, உத்தரானந்த மாவத்தை சந்தியூடாக காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திற்குள் பிரவேசிப்பதற்கு வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 7 முதல் நண்பகல் 12 மணிவரை ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறுவதால் குறித்த வீதிகள் குறித்த காலப்பகுதியில் மூடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, தேசிய தின நிகழ்வு ஒத்திகைகளின் காரணமாக கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதிகளில் நேற்று கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment