ரொஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பான பதற்றம் கொண்ட மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில் பெளத்த ஆயுதக் குழு ஒன்றுக்கும் இராணுவத்திற்கும் இடையில் கடந்த ஒரு மாதமாக இடம்பெற்று வரும் உக்கிர மோதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
மியன்மாரில் சுயாட்சி கேட்டு போராடி வரும் பல ஆயுதக் குழுக்களில் ஒன்றான அரக்கான் படையுடனேயே இராணுவம் சண்டையிட்டு வருகிறது. அதனால் சுமார் 2,500 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் பேச்சாளர் பர்ஹான் ஹக் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதம் தாங்கிய 30 ஆடவர்கள் எல்லைக் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிய சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் கடுமையாகக் காயமுற்றார் என்று அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
அரக்கான் இராணுவத்திற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பங்களாதேஷ் எல்லைக்குத் தொலைவில் உள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மியன்மார் இராணுவம், 2017இல் ரக்கைன் மாநிலத்தில் மேற்கொண்ட தாக்குதலால் அங்கிருந்து 730,000 ரொஹிங்கிய முஸ்லிம்கள் தப்பியோடி பங்களாதேஷில் தஞ்சம் புகுந்தனர்.
No comments:
Post a Comment