புத்தர் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) கண்டனம் - News View

About Us

About Us

Breaking

Monday, December 31, 2018

புத்தர் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) கண்டனம்

மாவனல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைக்கு சேதம் விளைவிக்கப்பட்டதை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதில் சம்பந்தப்பட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய காலகட்டத்தில், இவ்வாறான இழிசெயல்களால் பிரச்சினைகளையும் முறுகல் நிலையையும் ஏற்படுத்த முனைவது மிகவும் ஆபத்தானது.

நாடு அரசியல் நெருக்கடியிலிருந்து தற்காலிக ஆறுதல் பெற்றிருக்கிறது. இனி வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் தூண்டி விடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

ஆதலால் அரசாங்கமும் பொலிஸாரும் பொதுமக்களும் சமூகத் தலைவர்களும் விழிப்புணர்வுடன் செயற்பட்டு, அனாவசியமான பின் விளைவுகளைத் தடுக்க வேண்டும்.

அத்தோடு, இதேபோன்று கடந்த காலங்களிலும் பல்வேறு சமயத்தவர்களது வணக்க ஸ்தலங்கள் தாக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தாக்கியோரையும் அதற்குத் தூண்டியோரையும் இன, மத, கட்சி, அரசியல் பாரபட்சமின்றி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது கட்டாயமாகும். அப்போதுதான் எல்லோருக்கும் நீதி கிடைக்கும்.

கடந்த காலங்களில் பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டிருந்தால், இதுபோன்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

இது இவ்வாறிருக்க, அண்மையில் மரணித்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஸதகத்துல்லாஹ் மௌலவி, திகன கலவரத்திற்குப் பின்னே நின்று இயங்கிய கும்பலால் தாக்கப்பட்டதன் காரணமாகவே மரணித்தார். இது தெளிவான படுகொலையாகும். ஆதலால் அவரைத் தாக்கியோரையும் சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்த வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

NFGG ஊடகப் பிரிவு

No comments:

Post a Comment