இராமேஸ்வரம், தலைமன்னார் பயணிகள் படகு சேவை குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்தை - நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலைமைகளுக்கு பொதுத் தேர்தலே : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - News View

About Us

About Us

Breaking

Friday, November 30, 2018

இராமேஸ்வரம், தலைமன்னார் பயணிகள் படகு சேவை குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்தை - நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலைமைகளுக்கு பொதுத் தேர்தலே : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் சேவை ஆரம்பிப்பது தொடர்பாக இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்தமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதுதொடர்பில் தீர்க்கமான முடிவு விரைவில் எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

இதன்போது, இந்த பயணிகள் படகு சேவை தொடர்பில் விரைவான நடவடிக்கைகள் எடுப்பதற்கு என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக தெரவித்தார். நிச்சயம் இந்த சேவை இடம்பெறும் என்றும் அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டார்.

கேரளாவிலுள்ள ஐயப்பன் புனிததலத்தை வழிபடுவதற்காக செல்லும் இலங்கை பக்தர்களின் நலன்கருதி முன்னெடுக்கப்படும் இந்த படகு சேவையானது, இந்த யாத்திரை காலத்திற்கு பின்னர் சுற்றுலாத்துறைக்கு பயன்படும் வகையிலும் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திருப்புவதற்கும் பயன்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பயணிகள் படகு சேவை மூலம் வடக்கு மாகாணத்தில் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் இந்த சேவை பெரிதும் உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். படகு சேவையின் மூலம் குறைந்த செலவில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கும் வசதியாக அமையும் .

110,000 வீடுகளை கட்டும் பணியில் முதற்கட்டமாக 15ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் நிகழ்வு இந்த வருட இறுதிக்குள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டர். இந்த வீடுகள் முன்னரே வடமாகாணத்தில் உள்ள 8 மாவட்டங்களில் பதிவுசெய்து தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கே வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அமைச்சு பதவியை பொறுப்பேற்ற ஒருமாத காலத்திற்குள் எமது மக்களின் நலன் கருதி 10இற்கும் மேற்பட்ட அமைச்சரவை ஆவணங்களை சமர்ப்பித்து அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகார பகிர்வு தொடர்பாக ஊடகவியாலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இந்த விடயத்தில் தமது கட்சியின் நிலைப்பாட்டை பல வருடங்களிற்கு முன்னதாகவே தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

13ஆவது திருத்தத்தின் கீழான மாகாண சபையை சரியான முறையில் நடைமுறைப்படுத்தியிருந்தால் வடக்கு இன்று வளமான பிரதேசமாக வளர்ச்சியடைந்திருக்கும். கடந்த 5 வருட காலமாக மாகாண சபையின் நிர்வாகத்தை முன்னெடுத்தவர்கள் 5 வருடத்திற்கு பின்னரே குறைபாடுகளை தெரிவிக்கின்றனர். 

மாகாண சபையினால் பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மை கிடைக்கவில்லை. அதிகார பகிர்விற்கு தீர்வாக இதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். பொலிஸ் அதிகாரம் உள்ளிட்டவற்றை மத்திய அரசாங்கத்துடன் பேசி பெற்றிருக்கமுடியும். மாகாண சபையை நிர்வகித்தவர்கள் தமது அரசியலை தக்கவைத்துக் கொள்வதற்காகவே காலத்தை கடத்தினர். 

மத்திய அரசாங்கத்துடன் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாகாண சபையின் அதிகாரத்தை எமக்கு வழங்கினால் நிச்சயம் வடக்கினை அபிவிருத்தி செய்வோம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலைமைகளுக்கு பொதுத் தேர்தல் ஊடாகவே மக்கள் ஆணையைப்பெறமுடியும். இல்லையேல் இந்த பிரச்சனை தொடரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் சமீபத்தில் வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கும் ஈபிடிபி க்கும் எந்தத் தொடர்புமில்லை. அவ்விதமான சம்பவங்களுடன் ஈ.பி.டி.பி யை தொடர்புபடுத்தி கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாகவுமே கூறப்படுகின்றது என்று அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment