மூவின மக்களும் கலந்து வாழும் கல்முனை தொகுதியில் சகோதரத்துவத்தை கட்டிக்காக்க நாம் ஒன்றினைந்து செயற்படுவோம் - – முன்னாள் எம்.பி. பியசேன - News View

About Us

About Us

Breaking

Thursday, November 1, 2018

மூவின மக்களும் கலந்து வாழும் கல்முனை தொகுதியில் சகோதரத்துவத்தை கட்டிக்காக்க நாம் ஒன்றினைந்து செயற்படுவோம் - – முன்னாள் எம்.பி. பியசேன

மூவின மக்களும் கலந்து வாழும் கல்முனைத் தொகுதியில் சகோதரத்துவத்தைக் கட்டிக்காக்க நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம் என அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமானபி.எச்.பியசேன குறிப்பிட்டார்.

நேற்று (31) மாலை பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனைத் தொகுதிக்கான அமைப்பாளர், இணைப்பாளர், கொள்கை பரப்பாளர் போன்றோர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு முஸ்லிம் பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன் பியசேனவின் அக்கரைப்பற்று காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன் போது அவர் மேலும் உரையாற்றும் போது, சிறு தேசிய கட்சிகளுடனும் அதன் தலைமைகளுடனும் கண் மூடித்தனமாக ஊறிக்கிடக்கும் பிற்போக்குத்தனமான அரசியலைச்செய்ய முனையாமல் அவ்வாறு செய்து சீரழிந்து கிடக்கும் சமூகங்களைப் படிப்பினையாகக் கொண்டு தேசியக் கட்சியுடன் நேரடித்தொடர்பை ஏற்படுத்தி அரசியலில் சாதிக்க முனைய வேண்டும்.

நம் முன்னோர்களும் நாமும் இதுவரை காலம் செய்த பொறுப்பற்ற அரசியலுக்கு முடிவு கட்டுமுகமாக பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து மஹிந்த ராஜபக்ச அவர்களது கரங்களைப்பலப்படுத்தி நாம் இதுவரை காலம் செய்த தவறான அரசியலுக்கு பிரயாயச்சித்தம் தேடுவோம். மனித வாழ்க்கையின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்வதே தவிர, மூடத்தனமான அரசியலுடன் ஒட்டி நிற்பதல்ல.

மக்களை முட்டாளாக்கவும் தங்கள் இருப்பைத்தக்க வைக்கவும் சகோதர இனங்களுடன் தேவையற்ற பிணக்குகளை ஏற்படுத்திக்கொண்டு வடக்கு கிழக்கில் வாழும் மக்களை எந் நேரமும் குழப்ப நிலையில் வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் நிலைமையே அதிகமாகக் காணப்படுகிறது. இந்த அரசியல் நாடகங்களின் மூலம் இனங்கள் பிரிந்து செல்லவும் தங்களுக்குள்ளே கசப்புணர்வை பிரிவினையையும் வளர்த்ததைத்தவிர சாதித்தது ஒன்றுமில்லை.
மீண்டும் மீண்டும் பலர் அருவருக்கத்தக்கதும் புறக்கணிக்கக் கூடியதுமான அரசியலையே செய்ய முனைகின்றனர். இதற்கெல்லாம் நாம் ஒரு முடிவு கட்ட வேண்டிய காலம் வந்து விட்டது. குறிப்பாக, இஸ்லாமிய சமூகத்தில் உங்களைப் போல் ஆற்றலுள்ள இளைஞர்களும், முன்னேற்றத்தைப்பற்றிச் சிந்திக்கும் பெரியவர்களும் மித மிஞ்சி காணப்படுவதனால் தான் நீங்கள் ஓட்டமாவடி தொடக்கம் பொத்துவில் வரை வாழும் பிரதேசங்கள் ஔிமயமாகவும் ஏனைய பிரதேசங்கள் இருள் சூழ்ந்தும் காணப்படுவதற்கும் காரணம் உங்களைப்போல் அங்கே அரசியல் ஆற்றல்மிக்க இளைஞர்களும் ஆக்கபூர்வமாக சிந்திக்கும் பெரியோர்களும் இல்லாதது தான்.

அரசியல் உங்களுக்கு வரமாக இருக்கிறது ஏனையோர்கள் அதை சாபமாக கருதுகிறார்கள். அதை மாற்றத்தான் நாங்களும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். கருவாட்டுக்கூடையை தலைமாட்டில் வைத்து நீண்ட காலமாக உறங்குபவர்கள் மல்லிகை பூக்கூடையை மாற்றீடாக வைக்க முனைந்தால் கலவரமாகத்தான் இருக்கும்.

நீங்கள் பொதுஜன பெரமுனயின் தலைமையாம் எங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களது கரங்களைப் பலப்படுத்த நீங்கள் முனைந்திருப்பது எல்லை கடந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மீண்டும் சொல்கிறேன் சமூகம், சமுதாயம், பிரதேசம், இனம், மொழி பாதுகாக்கப்பட வேண்டும். வளர்ச்சியடைய வேண்டுமென சிந்திக்கும் உங்களைப்போல் சிந்திப்பவர்கள் தான் உங்கள் பிரதேசத்திற்கு கிடைத்த மாபெரும் வரம்.

எனவே, உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தலைமைத்துவத்துவங்களைச் சரியாகப் பயன்படுத்தி எதிர்காலத்தில் எமது அரசியல் சேவை பிரதேசத்தின் அனைத்து மக்களுக்கும் வேறுபாடின்றி பகிர்ந்தளிக்கப்படுவதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதோடு, உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

எஸ்.அஷ்ரப்கான்

No comments:

Post a Comment