குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக இத்தாலி அரசாங்கம் புதிய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதன்படி, மூன்று குழந்தைகளைப் பெற்றால் அவர்களுக்கு இலவசமாக விவசாய நிலமொன்றை வழங்க இத்தாலி அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே, அந்நாடுகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகின்றன.
ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலியில் தான் குழந்தை பிறப்பு விகிதம் மிகக்குறைவாக இருக்கிறது. கடந்த ஆண்டு அந்நாட்டில் 4,66,000 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன.
குழந்தை பிறப்பு குறைவாக இருப்பதால் அங்கு குழந்தைகள், இளைஞர்களை விட முதியவர்களே அதிகமாக உள்ளனர்.
அந்நாட்டில் பல ஆண்-பெண்கள் ஒன்று சேர்ந்து குடும்பமாக வாழ்கிறார்கள். ஆனால், அவர்கள் திருமணம் செய்துகொள்வது இல்லை. இதனால் குழந்தை பெற்றுக்கொள்வதிலும் ஆர்வம் காட்டுவதில்லை. இது தான் குழந்தை பிறப்பு குறைவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
மேலும், தம்பதியினருக்கும் குழந்தை பிறப்பது குறைவாகவே உள்ளது. ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாமலும் பலர் குழந்தை பிறப்பை நிறுத்தி விடுகிறார்கள்.
எனவே, குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக புதிய திட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது. அதன்படி, 3 ஆவது குழந்தை பெறும் தம்பதியருக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
குறிப்பிட்ட காலத்திற்கு அந்நிலம் அவர்களுக்கு சொந்தமாக இருக்கும். இத்தாலியில் 12 இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் அரசுக்கு சொந்தமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment