முதற்கட்ட நிவாரணங்கள் சிலவற்றை நாளை வர்த்தமானியில் அறிவிப்பேன் : பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ - News View

About Us

About Us

Breaking

Thursday, November 1, 2018

முதற்கட்ட நிவாரணங்கள் சிலவற்றை நாளை வர்த்தமானியில் அறிவிப்பேன் : பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ

மக்களுக்கு வழங்கப்படவுள்ள சில நிவாரணங்களை நாளை (02) வர்த்தமானியில் அறிவிக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று பல்கலைக்கழக விரிவுரையாளர்களை சந்தித்த போதே மஹிந்த ராஜபக்ஸ இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, பாராளுமன்றத்தை 5 ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் பிரயோகிக்க அரசியலமைப்பின் பிரகாரம் சபாநாயகருக்கு எவ்வித உரிமையும் கிடையாது. 

அவர் தமது உரிமைக்கு அப்பால் சென்றுள்ளார். அது அவருக்கு உகந்தது அல்ல. இந்த அனைத்து விடயங்களும் சட்டப்பூர்வமாகவே செய்யப்பட்டுள்ளன. ஒரு விடயம் கூட சட்டத்திற்கு முரணாக இடம்பெறவில்லை என்பதை நான் மிகவும் தௌிவாகக் கூற வேண்டும்.

இதேவேளை, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலுக்கு தயார் என மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். வரவு செலவுத் திட்டம் அல்லது வேறொன்றின் ஊடாகத் தாம் தோற்கடிக்கப்பட்டால், அதுவே தேர்தலுக்கு செல்லக்கூடிய மிகவும் இலகுவான வழிமுறை என அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சி விருப்பத்துடன் அதனை செய்தால் நானும் விருப்பத்துடன் ஒத்துழைப்பு வழங்குவேன். ஏனெனில், எனக்கும் தேர்தலே தேவைப்படுகின்றது. ஆகவே, இந்த இரண்டிற்கும் தயாராகவே இருக்கின்றோம். 

நான் நேற்று எனது கொள்கை தொடர்பில் சிறு விளக்கமளித்தேன். நான் உரையாற்றி வௌியேறிய போது முச்சக்கர வண்டி சங்கங்கள் 5 ரூபாவைக் குறைத்தன. 

முறையற்ற விதத்தில் வரி அறவிடப்படுகின்றது. நான் அன்றும் கூறினேன். பூக்களைக் கசக்காது வண்டு தேன் எடுப்பதைப் போன்று வரி விதிக்க வேண்டும். 

இங்கு மலரை கசக்கியுள்ளார்கள். ஆகவே, வர்த்தகர்கள் வருவதில்லை. முதற்கட்ட நிவாரணங்கள் சிலவற்றை நாளை நான் வர்த்தமானியில் அறிவிப்பேன் என மஹிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment