எக்காரணம் கொண்டும் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கப்போவதில்லை' என ஜனாதிபதி விடாப்பிடியாக உள்ளார்.
ஐ.தே.க சார்பில் ரணிலை எதிர்த்து பிரதமராக வருவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். அல்லது ஜனாதிபதி நினைப்பது போன்று சஜித், கரு அல்லது வேறு யாரையாவது அவர் பிரதமராக அறிவித்தாலும் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவோ பொறுப்பெடுக்கவோ முன்வரமாட்டார்கள்.
ஆனால் ஐ.தே.க.வின் முக்கிய பதவிகளில் இல்லாத யாரையாவது (சம்பிக, ராஜித) பிரதமராக அறிவிப்பதன் மூலம் தனது பிடிவாதத்தை நிறைவேற்றிக்கொள்ள ஜனாதிபதிக்கு வாய்ப்புள்ளது. இருந்தாலும் அப்படி சம்பிக போன்ற ஒருவரை நியமித்து ஒட்டுமொத்த முஸ்லிம்களின் விரோதத்தை சம்பாதிக்க ஜனாதிபதி விரும்பவும் மாட்டார்.
மேலும் ரணிலை எதிர்த்து, ஐ.தே.க சார்பில் யாராவது ஒருவர் பிரதமராக பதவியேற்றால் அவர் ஐ.தே.க. வின் வாழ்நாள் துரோகியாகப் பார்க்கப்படுவதோடு ஐ.தே.க. வின் சிரேஷ்ட உறுப்பினர்களது ஆதரவு அவருக்கு எப்போதும் இருக்காது. இங்கு தான் சஜித்திற்கான பிடி உள்ளது. சஜித்துக்கு ரணிலின் கொள்கைகளில் ஒரு சதமேனும் விருப்பம் இல்லாவிட்டாலும் ரணிலை பகிரங்கமாக அவர் எதிர்க்காமைக்கான காரணமும் இது தான்.
எதிர்காலத்தில் ஐ.தே.க. வின் தலைவராகவும் நாட்டு ஜனாதிபதியாகவும் வருவதற்கு கனவு கொண்டுள்ள சஜித்துக்கு ரணிலை எதிர்த்தால் எதுவுமே செய்ய முடியாது போய்விடும். ஏனெனில் ரணிலின் விருப்பமின்றி அவரால் ஐ.தே.க. தலைவராக முடியாது என்பதுடன் தற்போது ஐ.தே.க. ரணிலின் கைக்குள்ளேயே உள்ளது என்பதும் சஜித்துக்கு நன்றாகத் தெரியும்.
இவையனைத்தையும் மீறி அவ்வாறு ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டால் ஐ.தே.க சிரேஷ்ட உறுப்பினர்களின் பங்களிப்பின்றி தற்போதுள்ள சவால்களை முறியடித்து அரசாங்கத்தை கொண்டு செல்வதில் அவருக்கு பாரிய சிக்கல்கள் இருக்கும். இவ்வளவு பாரிய சவாலை ஏற்று பிரதமராகும் தைரியமும் ஆளுமையும் தற்போதுள்ள ஐ.தே.க வில் யாருக்கும் இல்லை.
அத்தோடு ரணில் தவிர்ந்த வேறொரு பிரதமருக்கு சிறுபான்மை கட்சிகளது ஆதரவையும் எதிர்பார்க்க முடியாது, இதற்கு முன் ஒரு போதுமில்லாதவாறு இப்போது ஐ.தே.க வுக்கு இருக்கும் சிறுபான்மை கட்சிகளது ஆதரவுக்கு முக்கிய காரணம் ரணிலே. அனைத்தும் ரணிலின் தனி முயற்சியால் திரட்டியவை.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, ரணிலின் விருப்புக்கு மாறாக ஒருவர் பிரதமராக வருவதை தற்போதுள்ள சூழ்நிலையில் மேற்குலகமும் விரும்பாது.
மேலும் இதிலுள்ள இன்னொரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் ரணிலை விட வேறொருவர் பிரதமராக வருவதும் ஐ.தே.க வின் தலைமைப் பொறுப்பை ஏற்பதும் அடுத்த தேர்தலில் தமக்கு புதிய சவாலை ஏற்படுத்தும் என்பதால் ஏற்கனவே பழக்கப்பட்ட எதிரியான ரணிலைத்தவிர வேறொருவர் புதிய பிரதமராக வருவதை மஹிந்தவும் விரும்ப மாட்டார். எனவே ரணிலையே பிரதமராக நியமிக்குமாறு தான் மஹிந்த தரப்பும் ஜனாதிபதிக்கும் அழுத்தம் கொடுக்கும்.
இத்தனையையும் வைத்துப் பார்க்கின்ற போது ஜே.வி.பியும் ஜனாதிபதி மைத்திரியும் மட்டுமே ரணில் மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்...
No comments:
Post a Comment