இலங்கையின் அரசை இன்று தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. பதினைந்து பாராளுமன்ற உறுப்பினர்களைத் தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைத்திருக்கும் இவ் வாய்ப்பானது சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய சந்தர்ப்பம் ஆகும். இச் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சாதுரியமாகப் பாவித்து ஆக்கபூர்வமான ண்டியது அவர்களின் தலையாய கடமை ஆகும்.
ஆனால், இக் காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நிலைப்பாடு இராஜதந்திரமா, அல்லது ஓர் சரணாகதி அரசியலா என்ற கேள்வியினை எழுப்பி உள்ளது.
நேற்றைய தினம் அவர்களின் பதின்னான்கு பாராளுமன்ற உறுப்பினர்களினால் கையெழுத்திடப்பட்டு ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் “இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேரந்த பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் கடந்த 26ம் திகதிக்கு முன்னர் இருந்த ஐ.தே.மு தலைமையிலான அரசாங்கத்தினை மீளமைப்பதற்கு ஆதரவளிப்போம் என்பதோடு ஐ.தே.முன்னணியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினைப் பெறக் கூடியவர் என நீங்கள் கருதும் நபரைப் பிரதம மந்திரியாக நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அவர்களின் செயற்பாடு இது முதற் தடவை அல்ல. கடந்த ஏப்ரல் மாதத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இதே போல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
அச் சந்தர்ப்பத்திலும் கூட அது தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்திச் செயற்பட்டதா என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.
இச் சூழலைப் பாவித்து எமது அடிப்படை அரசியற் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஓர் அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான உறுதிப்பாட்டினை ஐ.தே.மு அல்லது ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பெற்றிருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஓர் கோரிக்கையாகவே அமையும்.
ஏனெனில் அரசியலமைப்பு மாற்றத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை ஏற்படும் பட்சத்தில் சர்வஜன வாக்கெடுப்பிற்கும் செல்ல வேண்டியிருக்கும்.
ஆனால், நிர்வாக ரீதியாகவும், பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் தீர்க்கப்பட வேண்டிய எத்தனையோ விடயங்கள் உள்ளன. இன்று வனப் பாதுகாப்புத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பன தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை என்பன பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் மாகாணங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை மீறிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மாகாண சபைக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடையூறாக இருப்பது அரசியலமைப்பின் சரத்துகள் அல்ல, மாறாக மாகாண சபைகள் சட்டம் ஆகும். மாகாண சபைகள் சட்டத்தைத் திருத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை இல்லை. சாதாரண பெரும்பான்மையுடன் திருத்தி அமைக்கலாம்.
இவற்றிற்கு மேலாக அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனோர் தொடர்பான விடயங்கள், படையினர் வசமிருக்கும் அரச காணிகளை விடுவிப்பது என்பனவும் உடனடியாகச் செயற்படுத்தப்பட வேண்டிய அரசியல் வேலைத்திட்டங்கள் ஆகும்.
No comments:
Post a Comment