ஏ.ஆர். ஏ. ஹஸீர் அல்லது ரவூப் ஹஸீர் என்று ஊடக, இலக்கிய அன்பர்களால் அழைக்கப்படும் இவரின் இலக்கிய ஆளுமை விசேடமாக, கவிதைத் துறையில் இவரது பங்கு பாத்திரம் என்பது ஈழத்து இலக்கிய வரலாற்றில் மறக்க முடியாது. ஆனால், அப்படி அவரது பெயர் மறக்கடிக்கப்படுமானால் அதற்கான பொறுப்பையும் அவரே ஏற்க வேண்டும் என்பதே எனது கருத்து.
ஏ.ஆர். ஏ. ஹஸீருடன் 1978 களிலிருந்து நான் தொடர்பைப் பேணி வந்தவன். அவருக்காக ஒரு சர்ச்சையிலும் நான் சிக்கியவன். 1979 காலப் பகுதியில் நான் தினகரன் பத்திரிகையில் பணியாற்றிய போது அப்போது உதவி ஆசிரியராகவிருந்த (பின்னர் பிரதம ஆசிரியரானார்) காலஞ்சென்ற எஸ். அருளானந்தம் தயாரித்த ' இதய கோலம்' பகுதியில் இவரது கவிதை ஒன்று அவரது சித்திரத்திலேயே வெளியாகியிருந்தது. கவிதையின் தலைப்பு ' வணக்கத்துக்குரிய காதலியே' என்பதாகும். இந்தக் கவிதையை அன்று வெளியிட்டவர் அருளானந்தன் அல்ல. நான்தான். அவர் விடுமுறையில் சென்றதால் அவரது பகுதியை அந்த வாரம் நான் தயாரித்திருந்தேன்.
கவிதை வெளிவந்து விட்டது. மறுநாள் தொல்லைகள் ஆரம்பித்து விட்டன. ஒரு முஸ்லிம் கவிஞர் எவ்வாறு ஒருவரை 'வணக்கத்துக்கு உரியவர்' என குறிப்பிடலாம் என்ற சர்ச்சை வெளியிலிருந்து எழுந்தது.
பிரதம ஆசிரியர் ஆர். சிவகுருநாதன் ஐயா என்னை அழைத்தார். 'நீர் என்ன வேலை செய்துள்ளாய் என என்னைக் கடிந்தார்' 'இல்லை நான் செய்ததில் தப்பில்லை. அந்தக் கவிதைக்கான தலைப்பு சரியானது. கவிதை என்பது கற்பனை. எனவே, தலைப்பும் கற்பனையாகத்தான் இருக்கும்' என்று வாதம் புரிந்தேன். 'நீ அறப்படித்தவன்' என்று திட்டினார். நான் அவரது அறையிலிருந்து வெளியேறினன்.
பின்னர் மறுநாள் அருளானந்தன் வந்தார். 'நீ என்ன வேலை செய்தாய்' எனக் கேட்டார். நீங்கள் தந்த வேலையைச் சரியாகச் செய்துள்ளேன் என்று நான் பதிலளித்தேன். கோபப்பட்டவர் போன்று சென்று விட்டார்.
சில நாட்கள் கடந்து செல்ல பிரச்சினையும் மறந்தது. ஒரு வருடம் கடந்த செல்ல மீண்டும் எனது பிரதம ஆசிரியர் சிகுருநாதன் ஐயா அவர்கள் என்னை அழைத்தார். அறைக்குள் சென்றேன். 'ஞாயிற்றுக்கிழமை தினகரன் வாரமஞ்சரியில் கவிதைப் பகுதி ஒன்றை நீ செய்' என்றார். நான் மறுத்தேன். ஏன் மறுக்கிறாய்' என்றார். 'ஒரு கவிதையை வெளியிட்டு பல பிரச்சிகளை உங்களுக்கு உருவாக்கியவனாகக் கருதப்படும் என்னிடம் கவிதைப் பகுதியையா ஒப்படைக்கிறீர்கள்' என்று கேட்டேன். 'இல்லை நீ பிரச்சினைகளுக்கு நன்றாக முகங்கொடுத்து தீர்வு காண்கிறாய். 'அன்று நீ செய்தது தவறு அல்ல என்பதனை உணர்ந்துதான் புதிய பகுதியை உன்னைத் தயாரிக்குமாறு சொல்கிறேன்'. என்றார். அப்பாடி இப்போதாவது உண்மையை எனது பிரதம ஆசிரியர் சிவகுருநாதன் ஐயா புரிந்து கொண்டது மகிழ்ச்சியை தந்தது.
அதன் பின்னர் வாரமஞ்சரியில் 'கவிதைச்சோலை' என்ற பகுதியை தயாரித்தேன். இதனை ஏன் கூறுகிறேன் என்றால், எனது நண்பர் ஹஸீரின் 'வணக்கத்துக்குரிய காதலி'தான் அன்று நான் வாராந்தம் தினகரன் வாரமஞ்சரியில் கவிதைச் சோலை தயாரிக்க அத்திவாரமிட்டது என்பதற்காகவே.
அதன் பின்னர் எனது ஆசிரியர் பீடத்தினரை சீண்டிப் பார்ப்போம் என நினைத்த நான், நண்பர் ஹஸீரின் பல கவிதைகளை கவிதைச் சோலையிலும் தனியாகவும் வெளியிட்டேன். எந்தப் பிரச்சினையுமே இல்லை.
இனி ஹஸீரின் விடயத்துக்கு வருகிறேன். இவரது எந்தக் கவிதையை எடுத்தாலும் அது கற்பனையாகவிருந்தாலும் உயிரோட்டத்துடன் துடிக்கும். அன்றைய அவரது கவிதைகளை இன்று எடுத்துப் படித்தாலும் எவரும் அவற்றுக்கு ஒக்ஜிஸன் பாய்ச்சத் தேவை இல்லை. அவை அனைத்தும் சுயமாக மூச்சு விடக் கூடியதாக இன்றும் காணப்படும்.
மிக ஆழமாக, அற்புதமாக கவிதைகளை எழுதி அதற்கான சித்திரங்களையும் வரைந்து அனுப்புவார். எழுத்துப் பிழைகள் இருக்கா. திருத்தங்கள் செய்யும் தேவை இல்லை. அழகான கையெழுத்துக்கள்.
அன்றைய காலகட்டத்தில் அவர் தனது படைப்புகளை பத்திரிகைகளில் வெளியிட்டு வந்த அதேவேளை, வலம்புரி கவிதா வட்டத்தின் கவியரங்குகளில் பங்கேற்று தன் கவிதைகளை இலாவகமாக, எவரும் கேட்டுக் கொண்டே இருக்கக் கூடியதாக படிப்பார். ஒரு போதும் பட்டோலைகளாக அவரது கவிதைகள் அமைவதில்லை. ஓரிரு பக்கங்களுக்குள் ஓராயிரம் கதைகளைச் சொல்லி முடித்து விடுவார். இந்த வித்தியாசமான பாங்கு அனைவரையும் அவர்பால் ஈர்த்தது.
இவரது கவிதைகள் அச்சு ஊடகத்தில் மட்டுமல்ல பின்னரான காலத்தில் இலத்திரனியல் ஊடகங்களிலும் ஒலி, ஒலிபரப்பாகின.
தனது படைப்புகளை புத்தகமாக வெளியிட இவருக்கு ஆசை இருந்தாலும் அன்றைய காலகட்டத்தில் அது முடியாத காரியமாக, அவற்றை போட்டோ கொப்பி எடுத்து அதனை ஒரு நூல் போன்று வடிவமைத்து தான் பெற்ற பிள்ளை போன்று முத்தமிடுவார்.
அன்றைய காலத்தில் அவருக்கு இருந்த ஓவியத் திறனையும் நான் அறிவேன். அதன் காரணமகத்தான் இன்று கூட புதிது புதிதாக நவீனமாக எதனையும் செய்ய வேண்டும் என்று சிந்தித்தவராக உள்ளார். (சில விடயங்களை நான் அண்மையில் பார்த்த போதும் அதனைப் புரிந்து கொண்டேன்) அனைத்தும் சரியாக அமைய வேண்டுமென்பதில் சரியாகவும் இருப்பார்.
இப்படிப்பட்ட ஒருவர் அனைத்துத் தொழில்நுட்பங்களும் உள்ள இன்றைய காலத்திலாவது தனது கவிதைகளை தொகுத்து ஒரு நூலாவது வெளியிடமாலிருப்பது என்னைப் பொறுத்த வரை மிக வேதனையான விடயம். உயிர்மெய் எழுத்துகள் எத்தனை என்று கூட தெரியாத ஒரு சிலர் இன்று 'கவிதை' என்ற பெயரில் புத்தகங்களை வெளியிட்டு உயிர்வாழும் போது, உயிர்ப்புள்ள கவிதைகளை எழுதும் ஹஸீர் தனது கவிதைகளை ஒரு நூலாக வெளியிடாது அடைகாப்பது கவலை தருகிறது. கோழி அடைகாத்தால் குஞ்சாவது கிடைக்கும். நீங்கள் அடைகாத்தால் மிஞ்சுவது எதுவும் இல்லை. மறுபுறத்தில் கோழியாக நீங்கள் இருந்தாலும் சில விடயங்களில் ஆமையின் அடக்கம் இருக்கவே கூடாது.
எனவே, நண்பர் ஹஸீர் அவர்களே உங்கள் ஆக்கங்கள் வெளியான பத்திரிகைகளை துண்டு, துண்டுகளாகவும் ஒலி, ஒளிபரப்பானவற்றை நாடாக்களாகவும் தொடர்ந்தும் உங்களிடமே வைத்திருக்கும் இலக்கிய சுயநலத்தை கைவிட்டு மக்கள் மத்தியில் அவற்றைக் கொண்டு வாருங்கள், புதிதாக எழுதுங்கள் அதுவே பொதுநலமாக அமையும். எதிர்பாரக்கிறேன்!
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
No comments:
Post a Comment