அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட கிளைக் காரியாலயம் நிந்தவூரில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்களால் நேற்று (30) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வைபவத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரி. ஹஸன் அலி அவர்கள் கலந்து கொள்ளவில்லையே என்ற கேள்வியை எழுப்பி அதன் ஊடாக பலரும் பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர். இது முற்றிலும் தவறானது.
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு என்பது ஓர் அமைப்பு. அதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஓர் அங்கம் அவ்வளவுதான். அதற்காக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பிரமுகர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற தேவையும் இல்லை.
அதே போன்று கலந்து கொள்ளுமாறு அழைக்கும் அவசியமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு இல்லை. ஆனால், அழையாமல் எவரும் கலந்து கொண்டாலும் அதிலும் தவறில்லை. (இது அனைத்துக் கட்சிகளுக்கும் பொருத்தமானது)
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு என்பது தற்போதைக்கு தேர்தலுக்கான ஒரு கூட்டமைப்பு மட்டுமானது என்றே நான் கருதுகிறேன். இந்த அமைப்பானது ஓர் அரசியல் கட்சியாக அங்கீகாரமும் பெறவும் இல்லை.
உதாரணத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது அரசியல் கட்சியாக பதிவு செயற்படாத ஓர் அமைப்பு. ஆனால், அந்த அமைப்பில் அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்யப்பட்ட பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தேர்தல் மற்றும் அவர்கள் சார்ந்த சமூகத்தின் தேவைக்காக அவர்கள் ஒன்று கூடி செயற்படுவதற்கான ஒரு தளமாக மட்டுமே இது செயற்படுகிறது.
அதற்காக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சித்தார்த்தன் ஐயாவின் புளொட் அமைப்பின் காரியாலயம் ஒன்றின் திறப்பு விழாவுக்கு அதே கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சம்பந்தன் ஐயாவோ டெலோவைச் சேர்ந்த தம்பி செல்வன் அடைக்கலநாதனோ கலந்து கொள்ளும் தேவையும் இல்லை. அதே போன்று அழைக்க வேண்டிய அவசியம் புளொட் கட்சிக்கும் இல்லை. அவைகள் தனித்தனியான அரசியல் கட்சிகள்.
மேலும், மற்றையக் கட்சிகளின் கூட்டங்களில் சுயமாக அல்லது அழைக்கப்பட்டு கலந்து கொள்வதும் விடுவதும் அதே போன்று அழைப்பதும் அழைக்காமல் விடுவதும் அவரவர் விருப்பம். இதனை அடிப்படையாக வைத்து ‘முரண்பாடு வந்து விட்டது’ என்ற தோரணையில் தீர்மானித்து சந்தோஷப்படுவது மிகத் தவறானது.
இந்த அடிப்படையிலேயே ஐக்கிய மக்கள் கூட்டமைப்பையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் நோக்க வேண்டுமே தவிர வேறெந்தக் கண்ணோட்டத்தில் நோக்கினாலும் அது தவறான பார்வையாக அமையும்.( குறிப்பு:-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இவ்வாறனதொரு நிலைமை ஏற்பட்டிருந்தாலும் இதுவே எனது பதிலாக இருக்கும். நியாயம் அனைவருக்கும் சமமாக அமைய வேண்டும்)
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
No comments:
Post a Comment