கிழக்கில் முஸ்லிம் அமைச்சர்களை கொல்லுதல் மற்றும் பள்ளிவயல்களை தாக்கி தமிழ் முஸ்லிம் கலவரங்களை உருவாக்கும் திட்டம் தீட்டப்பட்டு அதற்கு பணமும் வழங்கப்பட்டது என்ற உளவாளி நாமல் பெரேராவின் குற்றச்சாட்டு சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான திரு. இரா. சம்பந்தன் மௌனமாக இருப்பது ஏன் என உலமா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
நாமல் பெரேரா தெரிவித்த கருத்துக்கள் சாதாரணமானதல்ல. இதன் மூலம் அமைதிக்கு திரும்பியுள்ள கிழக்கில் தமிழ் முஸ்லிம் மோதல்களை உருவாக்கி அதனை அடக்க இராணுவத்தை கிழக்குக்கு அனுப்ப வைத்து அதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொழும்பை கைப்பற்ற புலம் பெயர் தமிழீழ செயற்பாட்டாளர்களின் முயற்சி இதன் பின்னால் இருக்கலாம் என தெரிகிறது.
ஒரே மொழி பேசும் மக்களை மோதவிடும் இத்தகைய மோசமான விடயம் பற்றி ஊடகங்கள் பேசு பொருளாகிய நிலையில் இது பற்றி தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை விரும்புபவர் என்ற வகையில் திரு. சம்பந்தன் எதுவும் பேசியதாகவோ இவற்றின் உண்மைத்தன்மையை அறிய முற்பட்டதாகவோ காணவில்லை.
இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் மௌனமாக தூங்கிக்கொண்டிருக்கும் நிலையில் பிரதி அமைச்சர் ஹரீஸ் அவர்கள் இது பற்றி புலண் விசாரணை குழுவில் முறைப்பாடு செய்துள்ளமை மிகவும் பாராட்டுக்குரிய செயலாக நாம் பார்க்கின்றோம்.
அதே போன்று இதனை விசாரித்து உண்மையை தெளிவு படுத்தும்படி இதுவரை எந்த தமிழ் கட்சியும் முறைப்பாடு செய்ததாக காணவில்லை.
ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையிலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும் திரு. இரா. சம்பந்தன் அவர்கள் இது பற்றி பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து இவற்றின் உண்மைத்தன்மையை வெளிக்கொணர்வதுடன் இது பற்றி சர்வதேச விசாரணையை கோர வேண்டும் என்றும் உலமா கட்சி கோரிக்கை விடுக்கிறது.
No comments:
Post a Comment