ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய 6வது தடவையாக மீண்டும் திறந்த பிடியாணை - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 3, 2018

ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய 6வது தடவையாக மீண்டும் திறந்த பிடியாணை

அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (03) மீண்டும் பகிரங்கப் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

தூதுவராக செயற்பட்ட காலப்பகுதியில், 1,32,000 அமெரிக்க டொலர் பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், ஜாலிய விக்ரமசூரிய ஆஜராகாமையால் இந்தப் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜாலிய விக்ரமசூரிய, கொழும்பு மேல் நீதிமன்றத்தினூடாக பிணை பெற்றுக்கொண்டு, மருத்துவ தேவைகளுக்காக வௌிநாடு செல்வதாகக் கூறி அமெரிக்காவிற்கு சென்றுள்ளமையால், அவரின் பிணையாளிகளான மணைவி மற்றும் உறவினர் ஒருவரையும் கைது செய்யுமாறு மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜாலிய விக்ரமசூரியவிற்கு சொந்தமான நிறுவனத்துடன் ஏனைய நிறுவனங்கள் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நீதிமன்றத்தால் பெறப்பட்ட உத்தரவை 70 அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பாடநெறி ஒன்றை தொடர்வதற்கு இலங்கையிலுள்ள கல்வி நிறுவனமொன்றுக்கு 24 இலட்சம் ரூபா செலுத்தியுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் கெட்டம் பொக்ஸ் நிறுவனத்துடன் ஜாலிய விக்ரமசூரியவிற்கு சொந்தமான நிறுவனம் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

ஜாலிய விக்ரமசூரியவை நாட்டுக்கு வரவழைப்பதற்கு அமெரிக்காவிடம் கோரிக்கையை சமர்ப்பித்தால் அதனை விரைவுபடுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இது அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 06வது சந்தர்ப்பமாகும்.

No comments:

Post a Comment