யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் குழு மோதல்களில் ஈடுபட்ட 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், மோதல்களில் ஈடுபட்ட 38 பேரை கைது செய்துள்ளதாக யாழ்.பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று (02) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது, அண்மைக் காலங்களில் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராயப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் தனது ஆளுமைக்கி கீழ் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஆவா குழு சார்ந்த 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதென்றும், அதில் அதிகமாக 10 சம்பவங்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவிலும், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் 9 சம்பவங்களும் இடம்பெற்றன. அத்துடன் வெளிப்பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களுடன் சேர்த்து 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 38 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சிலருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பகுதிகளில் ஆவா குழுவைச் சாராத குழு மோதல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பிரதேசத்தில் உள்ள அஜித் குழுவினைச் சேர்ந்தவர்களில் 5 குற்றச் சம்பவங்கள் நிலுவையில் இருக்கின்றன. அந்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களில் பிரதான சந்தேக நபராக அஜித் என்ற இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதாக மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment