இந்தோனேசியாவில் இடம்பெற்ற அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,200 ஐ தாண்டியுள்ளது. இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை (28) 7.5 ரிச்டர் அளவிலான பூகம்பம் இடம்பெற்றதோடு, அதனைத் தொடர்ந்து பாரிய சுனாமி அனர்த்தமும் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டு தகவலுக்கு அமைய, இது வரை சுமார் 1,234 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் நிலையில், சர்வதேச உதவியை எதிர்பார்ப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணிகள் தீவிரம் உயிரிழப்பு அதிகரிப்பு
இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி அனர்த்தத்தால் இடிபாடுகளில் தொடர்ந்தும் பலர் சிக்கியிருக்கும் நிலையில் அவர்களை மீட்பதில் தன்னார்வ பணியாளர்கள் காலத்துடன் போராடி வருகின்றனர். இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை பெருந்திரளாய் புதைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பரந்த அளவான இந்த அனர்த்தத்தை கையாள்வதில் சிரமத்தை எதிர்கொண்டிருக்கும் இந்தோனேசிய நிர்வாகம் சர்வதேச உதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அனர்த்தம் ஏற்பட்டு நேற்று நான்கு தினங்களை எட்டும் நிலையில் சில பின்தங்கிய பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதோடு கனரக இயங்திரங்கள் இன்றி மீட்பு நடவடிக்கைகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இடிபாடுகளுக்கு சிக்கி இருக்கு பலரும் உதவி கோரும் நிலையில் அவர்களை காப்பற்ற முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
“அவர்கள் உதவி கோரி வருகின்றனர். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் சிக்கியுள்ள அவர்களின் மனநிலையை சரிப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் அவர்களுக்கு ஊக்கமளித்துவருகிறோம். குடிநீர் மற்றும் உணவும் வழங்கினோம். ஆனால், அவர்களுக்கு அது தேவையில்லை. அவர்களுக்கு இடிபாடுகளில் இருந்து வெளியே வர வேண்டும்” என்று மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
வெளிப்புறப் பகுதிகளில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் செய்திகள் நிர்வாகத்திற்கு கிடைத்து வருகின்றன. பாலு நகரில் இருந்து வடக்காக 300,000 மக்கள் வசிக்கும் பூகம்பம் மையம் கொண்ட பகுதிக்கு நெருக்கமாக டொங்காலா பிராந்தியத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
உயிர்ப்பாதுகாப்பு உதவிகளுக்காக பல சர்வதேச உதவி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு ஜனாதிபதி ஜோகோ விடோடோ அனுமதி அளித்துள்ளார்.
“அவசர அனர்த்த நிவாரணம் மற்றும் நடவடிக்கைகளுக்கான சர்வதேச உதவிகளுக்கு ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளார்” என்று சிரேஷ்ட அரச அதிகாரி டொம் லம்பொங் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமி அலையில் உயிரிழந்தவர்கள் குறைந்தது 844 பேர் என அறிவிக்கப்பட்டபோது அடுத்து வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை வேகமாக உயரும் என்று நிர்வாகம் அஞ்சுகிறது.
பேரழிவை ஏற்படுத்திய கரையோர நகரான பாலுவில் உள்ள மலைப்பகுதியில் தன்னார்வ பணியாளர்கள் உயிரிழந்தவர்களை புதைக்க 100 மீற்றர் நீளத்திற்கு குழி தோண்டியுள்ளனர். சுமார் 1,300 பேரை புதைப்பதற்கு வசதியாக அந்த குழு தோண்டப்பட்டுள்ளது.
உடல்கள் அழுகுவதால் ஏற்படும் நோய்த்தொற்றுகளை தடுப்பதற்கு நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதேபோன்று 14 நாட்கள் அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இடிபாடுகளுக்குள் அழுகுரல்
பாலுவின் புறநகர் பகுதியான பலரோவில் ஏற்பட்டிருக்கும் அழிவுகள் வெளிப்படையாக தெரிவதாக உள்ளன. அங்கு மரங்கள் சாய்க்கப்பட்டு கொன்கிரீட் குப்பையாக காணப்படுகிறது. இடிபாடுகளை அகற்றும் முயற்சியில் பலரும் ஈடுபட்டிருந்தபோதும் எங்கிருந்து அதனை ஆரம்பிப்பது என்று அவர்கள் திணறியுள்ளனர். அவர்களில் மூவர் தமது இளம் சகோதரரை தேடி வருகின்றனர்.
இதில் பாலு ஹோட்டலில் மாத்திரம் 60 பேர் வரை இடிபாடுகளுக்கு அகப்பட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது. 80 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலில் இருந்து மேலும் இருவர் உயிருடன் வெளியே எடுக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் உயிருடன் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த ஹோட்டல் இடிபாடுகளுக்கு அடியில் உதவிகள் கோரி மக்கள் கதறும் குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உயிர்தப்பியவர்கள் பொலிஸார் பார்த்திருக்க கடைகளில் இருந்து உணவு, குடிநீர் மற்றும் எரிபொருள் போன்ற அடிப்படை பொருட்களை களவாட ஆரம்பித்துள்ளனர்.
“எமக்கு உண்ண உணவு தேவைப்படும் நிலையில் இங்கு எந்த உதவியும் இல்லை. உணவுகளை பெற வேறு வழியில்லை” என்று அருகில் இருக்கும் கடையொன்றில் இருந்து பை நிறைய பொருட்களை திருடிவந்த ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
பூகம்பம் மற்றும் சுனாமியை அடுத்து பிராந்தியத்தின் மூன்று சிறைச்சாலைகளில் இருந்து சுமார் 1,200 கைதிகள் தப்பிச் சென்றிருப்பதாக அரச அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பலரும் கடந்த சில நாட்களில் தமது உறவினர்கள் அன்புக்குரியவர்களை தேடுவதில் காலத்தை செலவிட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை சுனாமி தாக்கும்போது அதி என்பவர் தனது மனைவியுடன் கடற்கரையில் இருந்துள்ளார். தனது மனைவி தற்போது எங்கே உள்ளார் அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது பற்றி அவருக்கு தெரியாதுள்ளது.
“அலை வந்தபோது நான் அவளை இழந்தேன்” என்று அவர் குறிப்பிட்டார். “நான் சுமார் 50 மீற்றர்கள் தூரம் அடித்துச் செல்லப்பட்டேன். எனக்கு பிடிப்பதற்கு எதுவும் இருக்கவில்லை” என்று அவர் கூறினார்.
மறுபுறம் பாலு நகரின் நிலைமையும் மோசமாக உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கானவர்களுக்கு என்ன ஆனது என்பது இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது.
சிதைந்த சாலைகள், சேதமடைந்த விமான நிலையம், தொலைதொடர்பு இல்லாமை என இவையெல்லாம் சேர்ந்து மீட்புப் பணிகளை கடினமாக்கி உள்ளன. நகரின் உட்புற பகுதிகளை தொடர்பு கொள்ள முடியாமல் உள்ளது.
“இந்த சுனாமியின் தாக்கம் என்ன என்பது இன்னும் நிச்சயமாக தெரியவில்லை” என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
திறந்த வெளியில் உறங்கும் மக்கள்
பாலு நகரில் திறந்த வெளியில் மக்கள் உறங்குகின்றனர். மருத்துவமனைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதால், திறந்த வெளியில்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இராணுவ மருத்துவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ள இராணுவத்தினர், நிவாரணப் பொருட்கள் பெற்றும், காயமடைந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றியும் வருகின்றனர். “மிகக் குறைந்த பொருட்களே இருப்பதால், உணவு, குடிநீர், மருந்து பொருட்களை எடுக்கலாம் என சேதமடைந்த கடைகளில் மக்கள் தேடுகின்றனர்” என்கிறார் ‘குழந்தைகளை பாதுகாப்போம்’ அமைப்பின் திட்ட இயக்குனர் டொம் ஹவெல்ஸ்.
அவுஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் சீனா உட்பட அண்டை நாடுகள் உதவி வழங்க முன்வந்திருப்பதோடு ஐரோப்பிய ஒன்றியம் 1.5 மில்லியன் யூரோ அவசர உதவியை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment