பாகிஸ்தானில் முதல்முறையாக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தாஹிரா சப்தார் எனும் பெண் நீதிபதி இன்று (31) பதவியேற்றார்.
பாகிஸ்தான் நாட்டில் உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக சமீபத்தில் தாஹிரா சப்தார் எனும் பெண் நீதிபதி நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், பலுசிஸ்தான் மாகணத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று அவர் தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார். இதனால், அந்நாட்டு உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி எனும் சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் தாஹிரா சப்தார்.
கடந்த 1982-ம் ஆண்டு முதல் பெண் சிவில் நீதிபதியாக பதவியேற்ற இவர், 1991-ம் ஆண்டு கூடுதல் மாவட்ட நீதிபதியாக பதவியேற்றார். அதன் பின்னர் 1996-ம் ஆண்டு முதல் பெண் மாவட்ட நீதிபதியாக அவர் பதவி உயர்வு பெற்றார்.
இதற்கிடையே, கடந்த 2009-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பணியாற்றிய இவர், தற்போது பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் மீது கடந்த 2007-ம் ஆண்டு தொடுக்கப்பட்ட தேச துரோக வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளில் தாஹிரா சப்தாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment