பாலஸ்தீன அகதிகளின் பராமரிப்பு செலவினங்களுக்கான நிதியை அமெரிக்கா நிறுத்தியதற்கு ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனம் மீது 1948-ம் ஆண்டில் போர் தொடர்ந்த யூதர்கள் இஸ்ரேல் என்னும் தனிநாட்டை உருவாக்கி கொண்டனர். இந்த போரில் யூத இனத்தவர்களுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருந்தது.
பின்னர், உயிருக்கு பயந்து தங்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேறியும், யூத ராணுவத்தால் அடித்து விரட்டப்பட்டும் சுமார் 50 லட்சம் பாலஸ்தீன மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
அருகாமையில் உள்ள ஜோர்டான், லெபனான், சிரியா, இஸ்ரேல் நாட்டை ஒட்டியுள்ள வெஸ்ட் பேங்க் மற்றும் காஸா முனையில் உள்ள அகதிகள் முகாம்களில் இவர்களும், இவர்களின் வம்சாவளியினரும் சுமார் 60 ஆண்டுகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நல்வாழ்வு முகமை இவர்களை கவனித்து வருகிறது.
இந்த அகதிகளுக்கு தேவையான உணவு, உடை, பிள்ளைகளின் கல்வி மற்றும் மருத்துவ செலவினங்களுக்கான நிதியை உலக நாடுகள் பகிர்ந்து அளித்து வருகின்றன. இதில் அதிக தொகையை வழங்கும் நாடாக அமெரிக்கா இருந்து வந்துள்ளது. இவர்களின் பராமரிப்புக்கு கடந்த ஜனவரி மாதம் தனது பங்களிப்பாக 6 கோடி டாலர்களை அமெரிக்கா வழங்கியது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நல்வாழ்வு முகமையின் செயல்பாடுகள் மற்றும் அதன் நிதி செலவினங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு திருப்திகரமாக இல்லாததால் இனிமேலும் பாலஸ்தீன அகதிகளின் பராமரிப்புக்கான நிதி அளிக்கும் திட்டத்தை நாங்கள் தொடர முடியாது.
அமெரிக்காவின் சார்பில் அளிக்கப்பட்டு வந்த நிதியுதவியை நிறுத்திவிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் நேற்று (31) அறிவித்தார்.
குறுகியக்கால போரின்மூலம் பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் என்னும் தனிநாட்டை பிரித்து தந்ததுடன், இருநாடுகளும் சொந்தம் கொண்டாடும் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக சமீபத்தில் அமெரிக்கா அங்கீகரித்தது. முதன்முதலாக ஜெருசலேம் நகரில் தனது நாட்டின் தூதரகத்தையும் அமெரிக்கா திறந்தது. இதற்கு பாலஸ்தீனம் மற்றும் சில அரபு நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், பாலஸ்தீனத்தை அடிபணிய வைப்பதற்காகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் பேசிவரும் அரபு நாடுகளின் குரலை ஒடுக்கவும் அகதிகளுக்கான நிதியை நிறுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் அதிருப்தியும் வருத்தமும் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை செயலாளரின் சார்பாக அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டெபானே டுஜாரிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாலஸ்தீன அகதிகள் நல்வாழ்வுக்காக பல ஆண்டு காலமாக ஆதரவு அளித்துவந்த அமெரிக்கா நிதியளிப்பில் மிகப்பெரிய பங்களிப்பை நல்கி வந்துள்ளது. தற்போதைய இந்த நடவடிக்கை வருத்தம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஏற்படும் நிதி பற்றாக்குறையை ஈடுசெய்ய இதர நாடுகள் முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment