அதாவுல்லாஹ்வை அழிவுச்சத்தியத்திற்கு அழைக்கிறார் சுபையிர் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 27, 2018

அதாவுல்லாஹ்வை அழிவுச்சத்தியத்திற்கு அழைக்கிறார் சுபையிர்

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை 30 மில்லியன் ரூபா பணங்களை ஒரு அரசியல் கட்சியிடம் பெற்றுக்கொண்டு புதிய அரசியல் கட்சி அமைக்கப்போவதாக, தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவிடம் நான் தெரிவித்ததாக உதுமா லெப்பை தெரிவித்து வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் உதுமா லெப்பை தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தெரிவித்து வரும் கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு (27) கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமா லெப்பை தேசிய காங்கிரஸ் கட்சியில் தான் வகித்த பதவிகளை இராஜினமா செய்து விட்டு, தனது ஆதரவாளர்கள் மத்தியில் குறித்த இராஜினமா தொடர்பில் விளக்கமளிக்கும் போதும், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத்தெரிவிக்கும் போதும் தனது பெயரைக்குறிப்பிட்டு அப்பட்டமான பொய்களைக்கூறி என் மீது போலிக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகிறார். இதனை நான் முற்றாக மறுக்கின்றேன்.

உதுமா லெப்பை கூறுவது போன்று அவரது உண்மைக்குண்மையான விசுவாசமுள்ள தலைவர் அதாஉல்லா ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் சுபையிர் மேற்கண்டவாறு என்னிடம் தெரிவித்தார் எனக்கூறுவாராக இருந்தால், நான் அழிவுச்சத்தியம் செய்வதற்கும், உதுமா லெப்பையின் வீடு தேடிச்சென்று மன்னிப்புக்கோரவும் தயாராகவுள்ளேன்.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமா லெப்பை தேசிய காங்கிரஸ் கட்சியில் தான் வகித்த சகல பதவிகளையும், அண்மையில் இராஜினமாச் செய்திருந்தார். அதன் பின்னர் சில தினங்களாக அவர் தனது தொலைபேசியினையும் நிறுத்தி வைத்திருந்தார். இதனால் அவரது கட்சி மட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் உதுமா லெப்பை தேசிய காங்கிரசில் வகித்த பதவிகளை இராஜினமாச் செய்துள்ளதாகவும், அவர் கட்சி தாவப்போவதாகவும் சமூக வலைத்தளங்கள் ஏட்டிக்குப் போட்டியாக செய்திகளை வெளியிட்டன. உதுமா லெப்பை தனது பதவிகளை இராஜினாமாச் செய்வதற்கும், தனக்கு விருப்பமான கட்சியொன்றில் இணைந்து கொள்வதற்கும் அவருக்கு உரிமையுள்ளது. அது அவரது தனிப்பட்ட விடயமாகும்.

கிழக்கு மாகாண சபையில் நீண்ட காலமாக உதுமா லெப்பையோடு ஒன்றாகச் செயற்பட்டவன் என்ற வகையிலும், அவர் எனது நெருங்கிய நண்பர் என்ற வகையிலும் பலர் என்னைத் தொடர்பு கொண்டு அவரது இராஜினாமா தொடர்பில் வினவினர். குறித்த இராஜினாமா சம்பந்தமாகவும், அதன் உண்மைத்தன்மைகளை அறிந்திராதவன் என்ற வகையிலும் என்னால் யாருக்கும் பதில் வழங்க முடியாமல் போனது.

இருந்த போதிலும், என்னால் உதுமா லெப்பையைத் தொடர்பு கொள்ள முடியாத போதிலும், குறித்த இராஜினாமா தொடர்பில், சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் உதுமா லெப்பைக்கு நெருக்கமானவர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்தேன். அவரது இராஜினமா தொடர்பான உண்மையான விடயத்தினையும் அறிந்து கொண்டேன்.

இது இவ்வாறிருக்க, உதுமா லெப்பை 30 மில்லியன் பணங்களைப் பெற்றுக்கொண்டு வேறுறொரு கட்சி அமைக்கப்போவதாக தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லாவிடம் நான் தெரிவித்ததாக உதுமா லெப்பை ஊடகங்களில் தெரிவித்து வரும் செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும். அவ்வாறு நான் ஒரு போதும் அதாஉல்லாவிடம் கூறவில்லை.

குறிப்பாக, நீண்ட கால நண்பர் என என்னை விழிக்கும் உதுமா லெப்பை குறித்த சம்பவம் தொடர்பில் என்னைத் தொடர்பு கொண்டு பேசாமலும் அதன் உண்மைத்தன்மையினை அறியாமலும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் எனது பெயர் குறிப்பிட்டு பேசியமை கவலையான விடயமாகும். சிரேஸ்ட அரசியல்வாதியும், அரசியல் முதிர்ச்சி மற்றும் நீண்ட கால அரசியல் அனுபவங்களைக் கொண்ட உதுமா லெப்பை இந்த விடயத்தில் சிறுபிள்ளைத்தனமாகச் செயற்பட்டுள்ளதுடன், அவரது அரசியல் முதிர்ச்சி, அனுபவம் என்பன கேள்விக்குறியாகியுள்ளது.

உதுமா லெப்பை தனதுரையில் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் நான் தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லாவுடன் பேசவில்லை என்பதுடன், அதனை அவரது கட்சித்தலைவர் உண்மையாகக் கூறினார் என்பதனை உதுமா லெப்பை ஆதாரங்களுடன் நிருபிக்க வேண்டும். அல்லது அவர் என் மீது சுமத்திய போலிக்குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டும்.

அம்பாரை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உதுமா லெப்பை எந்தக்கட்சியில் இருந்தாலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. அதனால் எனக்கு இலாபமும் கிடையாது. அவர் எங்கிருந்தாலும் எனது நீண்ட கால நண்பர் என்பதே எனது நிலைப்பாடாகும் எனவும் சுபையிர் மேலும் தெரிவித்தார்.

எஸ்.அஷ்ரப்கான்

No comments:

Post a Comment