நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுமாறு பொது எதிரணியால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் பிரதமருக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
‘பிரமுகர்கள் கொலைச் சதி’ தொடர்பில் விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு கோரி பொது எதிரணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான தினேஷ் குணவர்தனவால் நேற்று (28) சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற நிலையியல் கட்டளையின் 16ஆம் பிரிவுக்கமைய நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டுவதற்குரிய அதிகாரம் பிரதமருக்கே இருக்கின்றது.
இதன் காரணமாகவே பொது எதிரணியின் கோரிக்கையானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்குக் கொண்டு வரப்படும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களைக் கொலைசெய்வதற்கு சதித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என நாமல் குமார என்பவரால் வெளியிடப்பட்ட தகவல்களானது தெற்கு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது.
No comments:
Post a Comment