நாட்டின் சுற்றுலாத்துறை கடந்த மூன்றரை வருடங்களில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதுடன் வருடாந்தம் சுமார் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட உல்லாசப் பிரயாணிகள் நாட்டிற்குள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி தெரிவித்தார்.
அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசேட செயற்றிட்டம் காரணமாக அந்நியச் செலாவணியாக 3,500 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உலக சுற்றுலா தின சிறப்பு நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றன. அமைச்சர் ஜோன் அமரதுங்க, இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிகார, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி,
இலங்கையில் உல்லாசத்துறை முன்னேற்றம் அடைந்து வருகின்றது. வருடாந்தம் சுமார் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருகின்றனர்.
அந்த வகையில் 3,500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக கிடைக்கின்றது. கடந்த மூன்றரை வருடங்களில் நாட்டின் சுற்றுலாத்துறையானது 22 வீதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
இந்த வகையில் சுற்றுலாத்துறையானது நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பை செய்து வருகின்றது. இந்தத் துறையை அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாத்துறை அமைச்சு உள்ளிட்ட அதன் கீழ் செயல்படும் நிறுவனங்கள் இணைந்து இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
சுற்றுலாத்துறைக்கு பொருத்தமான இடங்களை இனங்காண்பது தொடர்பில், தற்போது ஆராயப்பட்டு வருகிறது. உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது.
அதேவேளை ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டங்கள், அவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து, இங்கு அதிகமாக செலவிடுகின்ற உல்லாசப் பயணிகளுக்கு நாம் முன்னுரிமையளிக்கிறோம். அவர்கள் தொடர்பில் நாம் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றோம்.
அத்தோடு சுற்றுலாத் துறை முன்னேற்றத்துடன் கூடியதான பிரதேச அபிவிருத்தி, மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான விடயங்களிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. வேலைவாய்ப்புகள் தொழில் ரீதியான செயற்பாடுகள் வருமானம் தொடர்பான பல்வேறு மட்ட கணிப்புகள் ஆகியன இதில் உள்ளடங்குகின்றன.
சுற்றுலாத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் ஜோன் அமரதுங்க இந்த விடயங்கள் தொடர்பில் சிறப்பான வழிகாட்டல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கி வருகின்றார்.
சுற்றுலாத்துறை அமைச்சு வடக்கில் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. குறிப்பாக மாவை சேனாதிராஜா எம்.பி. எமது அபிவிருத்தி செயற்பாடுகளிலும் பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள 50,000 வீட்டுத் திட்டம், மாவட்டத்தின் பிரதேச வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் ஆகியவற்றுக்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதற்கான முன்னோடி வேலைத் திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சர் ஜோன் அமரதுங்க அமைச்சரவையில் பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளார்.
அதற்கான நிதியை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் மூலம் வழங்குவதற்கும் அவர் இணக்கம் தெரிவித்துள்ளார். இதற்கு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி பெற்றுக்கொள்ளப்படும்.
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்கள் ஒன்றிணைந்து செயல்படும் ஒரு விசேட பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
50,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் பிரதமர் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
உல்லாசப் பயணத்துறை நாட்டின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாத ஒரு துறையாக உள்ளது. அதன் ஒரு அம்சமாகவே இம்முறை உலக சுற்றுலா தினத்தை நாம் வடக்கில் நடத்துகின்றோம். அதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை தெரிவு செய்து அங்கு நிகழ்ச்சிகளை நடத்துவது மகிழ்ச்சிக்குரியதாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment