மொரகஹகந்த - களுகங்கை அபிவிருத்தித் திட்டத்தின் நிர்மாணப் பணிகளில் இடம்பெற்ற ஊழல்கள், மோசடிகள் தொடர்பிலான தகவல்களை பெறுவதற்கான பிரிவொன்று ஜனாதிபதியினால் நிறுவப்பட்டுள்ளது.
திட்டத்தின் நிர்மாண நடவடிக்கைகளில் ஊழல், மோசடிகள் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்களுடனான தகவல்கள் காணப்படுமாயின், குறித்த பிரிவுக்கு அறிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 011 2034159 எனும் தொலைபேசி மூலமாகவும், 011 2879976 எனும் பெக்ஸ் மூலமாகவும், இது தொடர்பான தகவல்களை வழங்கலாம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 23 ஆம் திகதி இடம்பெற்ற களுகங்கை நீர்த்தேக்கத்தின் கன்னி நீர் நிரப்பும் விழாவின்போது இந்த விசேட பிரிவினை துரிதமாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டதற்கமைவாகவே இந்த விசேட பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அது தவிர “பணிப்பாளர் - விசாரணைகள், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, சொபாதம் பியச, இல. 416/ சீ/1, ரொபட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்ல” என்னும் முகவரியிலும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.
ரூபா 23,000 கோடி ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இந்நாட்டின் பாரிய பல்நோக்கு அபிவிருத்தி செயற்திட்டமான மொரகஹகந்த - களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகளை எவ்வித முறைக்கேடுகளுமின்றி முறையாகவும் வினைத்திறனாகவும் நிறைவு செய்து, அதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment