எனது தந்தையிடம் பணமிருந்திருந்தால் நானும் சிங்கப்பூர் சென்று கணித ஒலியம்பியட் போட்டியில் பங்கு பற்றியிருப்பேன். இது மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கப்பூரில் நடைபெற்ற கணித ஒலியம்பியட் போட்டிக்கு தெரிவாகி பணமில்லாததால் அங்கு செல்லாத ஒரு மாணவரின் ஏக்கமாகும்.
சிங்கப்பூரில் நடைபெற்ற கணித ஒலியம்பியட் போட்டியில் பதக்கங்கள் பெற்ற காத்தான்குடி மாணவர்கள் சிலர் கடந்த வெள்ளிக்கிழமையன்று காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பெரிய மீரா ஜும்ஆப்பள்ளிவாயலில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் பள்ளிவாயல் நிருவாகத்தினரால் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது அங்கு ஜும்ஆ தொழுகைக்கு வந்து அந்த நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த இந்த மாணவன் ஜும்ஆ முடிந்து தனது வீட்டுக்கு சென்று என்னையும் சிங்கப்பூருக்கு அனுப்பியிருந்தால் நானும் பதக்கம் வென்றிருப்பேன். என்னையும் இன்று கௌரவித்திருப்பார்கள் எனக் கூறி தாய் தந்தையிடம் அழுது புலம்பியுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற கணித ஒலியம்பியட் போட்டிக்கு காத்தான்குடியிலிருந்து 7 மாணவர்கள் தெரிவானார்கள். அவர்களின் சொந்த செலவிலேயே விமானப்பயணச் சீட்டு உட்பட அணைத்து செலவுகளுமாகும். இதில் சில மாணவர்களின் பெற்றார்களிடம் பண வசதி இல்லாததால் அவர்கள் அங்கு செல்ல வில்லை.
இந்த மாணவர்களின் நிலை குறித்தும் பெற்றாரின் நிலை போன்ற விடயங்களைக் கூறி தெரிவான அத்தனை மாணவர்களையும் சிங்கப்பூர் செல்வதற்கு உதவுங்கள் என அம்மாணவர்களின் பெற்றோரினால் காத்தான்குடியைச் சேர்ந்த சில சமூக நிறுவனங்களிடமும் அரசியல் பிரமுகர்களிடமும் எழுத்து மூலமான வேண்டுகோள் ஒன்று கடந்த புனித றமழான் மாதத்தில் முன் வைக்கப்பட்டது. ஆனால் அதை யாருமே கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் தான் மிகவும் கஷ்டப்பட்டு சில மாணவர்கள் அங்கு சென்று வந்தார்கள். இன்னும் சில மாணவர்கள் பெற்றாரிடம் பண வசதியில்லாததால் அங்கு செல்ல வில்லை. செல்லாத மாணவர்கள் கவலையுடனும் ஏக்கத்துடனும் காணப்படுகின்றனர்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி
No comments:
Post a Comment