21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அண்ணா சதுக்கத்தில் கருணாநிதி உடல் நல்லடக்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 8, 2018

21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அண்ணா சதுக்கத்தில் கருணாநிதி உடல் நல்லடக்கம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அவரது தலைவர் அண்ணா சமாதிக்கு பின்புறம் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது உடல் 8 மணியளவில் கோபாலபுரம் இல்லம் கொண்டு செல்லப்பட்டு குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

பின்னர், இன்று அதிகாலை 1 மணிக்கு சிஐடி காலனி வீட்டுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் குடும்ப உறுப்பினர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அதிகாலை 4 மணிக்கு அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அதிகாலை முதல் தற்போது வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் அவருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி கருணாநிதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், 4 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடல் ஏற்றப்பட்டது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், போலீசார், பொதுமக்கள் என அனைவருக்கும் மத்தியில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. 

இந்த ஊர்வலம் சிவானந்தா சாலை, அண்னா சாலை, வாலாஜா சாலை வழியாக தொண்டர்களின் கண்ணீருக்கு மத்தியில் அவரது இறுதி ஊர்வலம் வந்தது. சாலையின் இருபுறமும் தொண்டர்கள், பொதுமக்கள் கூடி நின்று ‘கலைஞர் வாழ்க’ என உணர்ச்சிப்பெருக்கில் குரல் எழுப்பினர். தான் பெயரிட்ட காமராஜர் சாலையை வழியே வந்த அவரது உடல் அங்கிருந்து அண்ணா சதுக்கம் கொண்டு வரப்பட்டது.
அண்ணா சமாதிக்கு அருகில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தேவே கவுடா, பன்வாரிலால் புரோகித், ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, டெரிக் ஓ பிரையன், நாராயண சாமி, குலாம் நபி ஆசாத், ஜெயக்குமார், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 

பின்னர், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. 

இதனை அடுத்து, முப்படை அதிகாரிகள் அவர் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடியை அகற்றினர். மூவர்ணக்கொடி ஸ்டாலின் வசம் கொடுக்கப்பட்டது.
கருணாநிதியின் உடலுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி அளித்தனர். 

பின்னர், ‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்’ என எழுதப்பட்ட சந்தனப்பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டது.

குடும்ப உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனுடன் தொடரான செய்திகளை பார்வையிட
https://www.newsview.lk/2018/08/blog-post_454.html
https://www.newsview.lk/2018/08/6863.html
http://www.newsview.lk/2018/08/4_8.html
http://www.newsview.lk/2018/08/blog-post_863.html
http://www.newsview.lk/2018/08/blog-post_849.html
https://www.newsview.lk/2018/08/blog-post_925.html
https://www.newsview.lk/2018/08/blog-post_361.html
http://www.newsview.lk/2018/08/blog-post_448.html

No comments:

Post a Comment