திருகோணமலை மாவட்ட மீனவர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. அகில இலங்கை பொது மீனவர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (புதன்கிழமை - 08) காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தடைசெய்யப்பட்ட மீன்பிடித்தொழில் முறைகளை உடனடியாக அரசாங்கம் நிறுத்த வேண்டும், அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணை விலை உடனடியாக குறைக்கப்படவேண்டும் மற்றும் அனைத்து மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளும் உடன் தீர்க்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்களை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது மணிக்கூண்டு கோபுரத்திற்கு முன்பாக கூடி கோசம் எழுப்பிய மீனவர்கள், பேரணியாக மாகாண கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
அத்துடன், குறித்த ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வீ.எம்.சீ. போயகொடவிற்கும், மீனவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட சில உறுதிமொழிகளை அடுத்து மீனவர்கள் கலைந்து சென்றார்கள்.
No comments:
Post a Comment