முதலமைச்சரை பதவி விலக கோருவது ஒரு கேலிக்கூத்தாகும் என்று வட மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜா தெரிவித்தார். இன்று 91) வட மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராஜாவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், டெனிஸ்வரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் ஊடாக மாகாண சபையினுடைய அதிகாரங்கள் தொடர்பாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. ஒரு முதலமைச்சர் தான் அமைத்த அமைச்சரவையையே மாற்ற முடியாது என்றால் அந்த மாகாண சபைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்த வட மாகாண சபையை உருவாக்கிய பின்னர் நாங்கள் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்நோக்கி கொண்டு இருக்கிறோம். இந்த தீர்ப்பானது வட மாகாண சபையின் முதலமைச்சருக்கோ, அமைச்சர்களுக்கோ. உறுப்பினர்களுக்கோ எந்த அதிகாரமும் இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வந்த அமைச்சர் அதனூடாகவே வந்த அமைச்சரை நீக்கியதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிலே அங்கம் வகிக்கின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இதற்கு எதிராக வழக்குத்தொடுத்து அந்த வழக்கை நடாத்தியமை மனவருத்தத்திற்குரிய விடயமாகும்.
இதேவேளை அரசியல் தீர்வு விடயமும் கூட ஒரு போலியானதாகவே இருக்கும் என்பது எனது கருத்து. அதற்கும் அப்பால் எமது கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முதலமைச்சர் உட்பட இந்த அரசியல் அமைப்பு உப்புச்சப்பு அற்ற ஒரு விடயம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் இதில் பல அதிகாரங்கள் இருப்பதாக கூறிக்கொண்டு அதனை ஏற்றிருக்கின்றது.
வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் முதலமைச்சரை கௌரவமாக பதவி விலக வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த எதிர்க்கட்சி தலைவர் தான் எப்போதோ தனது பதவியில் இருந்து கௌரவமாக விலகியிருக்க வேண்டியவர். அவர் அப்படி விலகியிருப்பாராய் இருந்தால் இப்போது முதலமைச்சரை விலகச்சொல்வது நியாயமானதாக இருந்திருக்கும்.
பல சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும், விழுத்த வேண்டும் என்றும் அவரது கட்சியே பல கோரிக்கைகளை எழுத்து மூலமாக விடுத்த போதிலும் அவர் அந்த பதவியிலேயே இருப்பேன் என கங்கணம் கட்டிக்கொண்டு இருந்து தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக பார்க்கப்படும் முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவியில் இருந்து விலக கூறவது ஒரு கேலிக்கூத்தாகவே பார்க்கப்படுகின்றது என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment