30-வருடங்களுக்கும் மேலாக மீள் குடியேற முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் ‘கள்ளிச்சை’ கிராம மக்களும், அதனைக் கண்டுகொள்ளாமல் வாழ்ந்துவரும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் !
1918 ஆம் ஆண்டு அதாவது சரியாக ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த வரலாற்றைக் கொண்ட ‘கள்ளிச்சை’ என்னும் பெயர் கொண்டழைக்கப்படும் செழிப்புமிக்க கிராமமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இயந்கை எழில்மிகு ஒரு கிராமமாகும்.
100 வீதம் முஸ்லிம் மக்களைக்கொண்ட இக்கிராமம் அயலில் வடமுனை என்னும் தமிழ்க் கிராமத்தையும் பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிக்கந்ததை என்னும் கிராமத்தையும் கொண்டு அமைந்துள்ளது.
இயற்கை வளம் மிக்க இக்கிராமம் வயல் நிலங்களாளும், மேட்டுப் பயிர்ச்செய்கை நிலங்களாளும் சூழப்பட்டுள்ளதுடன் கிராமத்தின் மத்தியில் அமையப்பெற்றுள்ள கள்ளிச்சைக் குளமானது இக்கிராமத்தின் ஒரு முத்தாகவும் காணப்படுகிறது.
இவ்வாறு இயற்கை வளம் மிக்க கள்ளிச்சை கிராமம் முன்நாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ‘நிருவாகத்தை மக்களின் காலடிக்குக் கொண்டு செல்லும் திட்டத்தின் ‘பயணாக பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டு அதுவரை மாவட்ட செயலகங்களான கச்சேரிகளில் மையப்படுத்தப்பட்டிருந்த அரச நிருவாகம் பரவலாக்கப்பட்டு பிரதேச செயலகங்களாகவும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டு மக்களுக்கான சேவை மிக இலகுபடுத்தப்பட்டது.
1990 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பிரஜை தனது பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கும் பல கிலோமீற்றர் கடந்து கச்சேரிகளுக்குச் சென்று அதனைப் பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைமை காணப்பட்டது. இதனை அந்தந்த பிரதேச மக்கள் வாழும் இடங்களில் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை இலகுபடுத்தி ஏற்படுத்திய பெருமை முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸாவையே சாரும்.
அவ்வகையில் கள்ளிச்சை முஸ்லிம் கிராமமானது 883-ஆம் இலக்க, 04-07-1997 ஆம் திகதிய அரச வர்த்தமானி பிரகடனத்தின்படி கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக நிருவாகத்திற்குள்ளடக்கப்பட்டு நிருவாகம் செய்யப்பட்டது. (முஸ்லிம்) கிராம அலுவலர்களும் இக்கிராமத்தில் கடமையாற்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மட்-கள்ளிச்சை முஸ்லிம் கலவன் பாடசாலை, கிராம அபிவிருத்திச் சங்கம், கிராமத் தலைவர்கள், கள்ளிச்சை ஜூம்ஆ மஸ்ஜித் என ஒரு கிராமத்தின் சகல உட்கட்டமைப்பு வசதிகளும் அமையப்பெற்று எழில்மிக்கதும் அமைதியானதுமான ஒரு கிராமமாகத் திகழ்ந்தது.
எனினும், நாட்டில் பயங்கரவாத யுத்தம் நிலவிய காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம் கிராமங்களுக்கு ஏற்பட்டதைப்போன்ற அச்சுறுத்தல்களும், இழப்புக்களும் கள்ளிச்சைக் கிராமத்திற்கும் ஏற்பட்டது. எல்லைப் பிரதேசத்தில் அமைந்திருந்ததனால் இக்கிராமத்தில் வசித்துவந்த மக்கள் தமது உயிர், உடைமைகளின் தொடர்ச்சியான இழப்புக்களையும் சகித்துக்கொண்டு வாழ்ந்தபோதிலும் பயங்கரவாத மற்றும் இன வன்முறைகளின் உச்சக்கட்டத்தின்போது இக்கள்ளிச்சை கிராம மக்களும் வாழ்விடங்களை இழந்து தமது உயிர்களையாவது காத்துக்கொள்ளும் நோக்குடன் இக்கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து அயல் பிரதேசங்களில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர்.
நாட்டின் வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தீவிர யுத்தம் நிலவிய சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் பூர்வீகமாக வசித்துவந்த முஸ்லிம் மக்கள் தமது எல்லைகளைக் காப்பாற்றிக்கொள்ள இயலாத நிலைமையில் தமது வாழ்விடங்களையும் வயல் நிலங்களையும் இழக்கும் துர்ப்பாக்கிய நிலைமைக்குத் தள்ளப்பட்டனர்..
பாசிசப்புலிகளின் அச்சுறுத்தல், அடக்குமுறைகளின் ஒரு கட்டமாக கள்ளிச்சைக் கிராமத்தில் பல தசாப்தங்களாய் பூர்வீகமாக வாழ்ந்துவந்த மக்கள் தமது வாழ்விடங்களை விட்டும் துரத்தியடிக்கப்பட்டனர். அத்துடன், ஓட்டமாவடி பிரதேச செயலக நிருவாகத்திற்குட்பட்ட குறித்த கள்ளிச்சைக் கிராமம் உட்பட முஸ்லிம்களின் பல்லாயிரக்கணக்கான பயிர்ச்செய்கை நிலங்களை உள்ளடக்கியிருந்தன.
1. வாகநேரி, 2. புணானை மேற்கு (பொத்தானை), 3. கள்ளிச்சை போன்ற மிகப்பெரிய நிலப்பரப்புக்களை உள்ளடக்கிய சுமார் ஐந்து (5) வளம் மிக்க கிராமங்களை புதிதாக 2002ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிரான் (கோறளைப்பற்று தெற்கு) பிரதேச செயலகத்துடன் உத்தியோகபூர்வமற்ற வகையில் ஆயுத முனையில் திட்டமிட்டு வலுக்கட்டாயமாக இணைத்துக்கொண்டனர். இதற்கு அப்போதைய தமிழ் அரசியல்வாதிகளும்இ தமிழ் சிவில் நிருவாகிகளும் ஒத்துழைப்பு வழங்கினர்.
நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அன்று முஸ்லிம் தரப்பு மிகப் பலவீனமாகக் காணப்பட்டது . அரசில் ரீதியில் எந்தளவுக்கு முஸ்லிம்கள் பலவீனமாகக் காணப்படனரென்றால் ஓட்டமாவடி பிரதேச செயலக நிருவாகத்திலிருந்த 17 கிராம அலுவலார் பிரிவுகளில் 9 பிரிவுகளைப் பிரித்து கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை (முஸ்லிம்) செயலகம் என்ற பெயரை மாத்திரம் பெற்றுக்கொள்வதற்கு தம்மிடமிருந்த 5 வளம் மிக்க கிராமங்களை தாரைவார்க்கும் அளவுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் சிந்தனை வட்டம் குறுகியிருந்தது. (இன்றும் அது தூரநோக்குப் பெறவில்லை)
அவ்வாறு, இந்த 5 கிராமங்களையும் கிரான் பிரதேசத்துடன் இணைப்பதில் அப்போது புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியான விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கருணா அம்மானும், முன்னாள் கிழக்கு முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானும் அதிக அக்கரை காட்டினர்.
வடக்கிலும், கிழக்கிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களை மீளப்பெற்றுக்கொள்வதில் இன்று சாதகமான நிலைமை காணப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதுடன் இதுவரை மீள் குடியேற முடியாதவர்களுக்கு தமிழ் தரப்பு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தாம் சார்ந்த சமூகத்திற்காக அதிக சிரத்தை எடுத்து அவர்களது மீள் குடியேற்ற நடவடிக்கைகளை மிகத் துரிதப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
இது உண்மையில் வரவேற்கத்தக்கது. தாம் சார்ந்த சமூக்தின் விடியலுக்காக புலிகளின் சார்பில் தமிழ் அரசியல்வாதிகள் இராப்பகல் பாராது சேவையாற்றுவது தமிழ் மக்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.
அதேவேளை யுத்தத்தால் இருபக்கப்பாதிப்புக்களைச் சந்தித்த முஸ்லிம் மக்களுக்கு அவர்களது மீள்குடியேற்றத்திற்கு அரசியல்வாதிகளதோ அதிகாரிகளதோ முழு ஒத்துழைப்பும், வழிகாட்டலும் இதுவரை கிடைக்கப்பெறாமல் உள்ளமை அம்மக்களின் துரதிர்ஷ்டமே.
எனவேதான், யுத்தத்தால் இடம்பெயர்ந்து பல இடங்களிலும் சிதறிவாழும் அப்பாவி கள்ளிச்சை மக்களின் அபயக் குரல்களுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் பதில் என்ன ???
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களது மூன்று பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகளும் என்ன வேலைத்திட்டத்தை இம்மக்களுக்காக செய்வதற்குத் திட்டமிட்டுள்ளார்கள் ???
அல்லது வழமைபோல் இதனை எதிர்வரும் மாகாணசபை தேர்தலுக்கும், 2020ல் வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குமான ஒரு துருப்புச் சீட்டாக வைத்து மக்களின் வாழ்க்கையுடன் விளையாடப்போகின்றனரா ?
1. பிரதி அமைச்சர் எம்.ஏ.எல்.எம் ஹிஸ்புழ்ழாஹ்,
2. பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர்அலி,
3. பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா.
மூன்று மக்கள் பிரதிநிதிகளுக்கும் இது சமர்ப்பணம் !
குறிப்பு : ‘’கல்குடா மஜ்லிஸ் ஷூரா” இவ்விடயத்தில் பூரண ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படும்.
A.S. ஜெமீல் (BA),
‘கல்குடா மஜ்லிஸ் ஷூரா,
நம்பிக்கையாளர் - முகைதீன் ஜூம்ஆ மஸ்ஜித், ஓட்டமாவடி.
No comments:
Post a Comment